தைலாபுரத்தில் 2வது நாளாக விசாரணை ஒட்டு கேட்பு கருவியை ஒப்படைக்க ராமதாஸ் மறுப்பு; பட்டியலை தயாரிக்கும் போலீஸ்
இவ்விவகாரம் தொடர்பாக கடந்த 15ம்தேதி பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் விழுப்புரம் சைபர் கிரைம் பிரிவில் புகார் மனு அளித்தார். இதையடுத்து நேற்று முன்தினம் விழுப்புரம் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி தினகரன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர், எஸ்ஐ கொண்ட 8 பேர் கொண்ட குழுவினர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து ராமதாஸ் மற்றும் அவரது உதவியாளர், பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
நேற்று 2வது நாளாக போலீசார் அங்கு விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ஒட்டு கேட்பு கருவியை ஆய்வு செய்ய போலீசார் கேட்டபோது, அதை ஒப்படைக்க ராமதாஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. ஒட்டுகேட்பு கருவி ெதாடர்பாக தனியார் ஏஜென்சி இன்னும் முழுமையான ஆய்வறிக்கையை சமர்ப்பிக்காத நிலையில், அதுகுறித்த முழுமையான விபரங்கள், என்னென்ன தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட தகவல் வந்தபிறகே ஒப்படைக்க முடியும் என ராமதாஸ் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தனிப்படையினர் விசாரணையை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். ஒட்டு கேட்பு கருவியை ஒப்படைத்த பிறகே அடுத்தகட்ட விசாரணையில் போலீசார் இறங்க முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. தைலாபுரத்தில் எந்த தேதியில் இருந்து இந்த கருவி பயன்படுத்தப்பட்டது என்பதை கண்டுபிடித்து அன்றைய தினத்தில் அங்கு வந்து சென்றவர்களை பட்டியல் எடுத்து விசாரணை நடத்த தனிப்படையினர் முடிவு செய்துள்ளனர். கருவியை ஒப்படைக்காததால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.