டி20 உலக கோப்பை வென்ற இந்திய வீராங்கனைகளை நேரில் அழைத்து வாழ்த்தி, பரிசுத் தொகைகளை அறிவித்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா!
பெங்களூரு: பார்வையற்றோருக்கான டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த கர்நாடக வீராங்கனைகளுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் அரசுப் பணி வழங்கப்படும் என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். மேலும் மற்ற மாநில வீராங்கனைகளுக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் வென்று, கோப்பையுடன் பெங்களூரு திரும்பிய இந்திய பார்வையற்ற மகளிர் கிரிக்கெட் அணியை முதல்வர் சித்தராமையா தனது இல்லத்தில் வைத்து கௌரவித்தார். இந்திய அணியின் வெற்றிக்காக உழைத்த வீராங்கனைகளைப் பாராட்டிப் பேசிய முதல்வர், அணியின் தலைவி மற்றும் கர்நாடக மாநிலம் துமகூரின் ஷிரா-வைச் சேர்ந்த தீபிகாவின் திறமையான தலைமைப் பண்பை வெகுவாக பாராட்டினார்.
வெற்றி பெற்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கர்நாடக மாநில வீராங்கனைகளுக்குச் சிறப்பு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்குத் தலா ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும், அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியில் பங்காற்றிய மற்ற மாநிலங்களைச் சேர்ந்த 13 வீராங்கனைகளுக்கும் ஊக்கமளிக்கும் விதமாக, அவர்களுக்குத் தலா ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசை முதல்வர் சித்தராமையா வழங்குவதாகவும் அறிவித்தார்.
வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள முதல்வர் சித்தராமையா, அவர்களுடைய வருங்கால விளையாட்டுப் பயணம் இதேபோல் பல வெற்றிகளுடன் சிறந்து விளங்க வாழ்த்துவதாக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.