3வது டி20 போட்டி மந்திர பேட்டிங்கால் சுந்தர் சாகசம்: ஆஸியை அடக்கி இந்தியா வெற்றி முழக்கம்
ஹோபார்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில், வாஷிங்டன் சுந்தரின் அதிரடியால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2வது போட்டியில் ஆஸி வென்றது. இந்நிலையில், 3வது டி20 போட்டி ஹோபார்ட் நகரில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய ஆஸி அணியின் துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் 6, பின் வந்த ஜோஷ் இங்லீஸ் 1 ரன்னில் எளிதில் வீழ்ந்து அதிர்ச்சி தந்தனர். அதன் பின் கேப்டன் மிட்செல் மார்ஷ் உடன் இணை சேர்ந்த டிம் டேவிட் அதிரடி ஆட்டத்தை அரங்கேற்றி 38 பந்துகளில் 74 ரன் குவித்தார். 9வது ஓவரில் மார்ஷ் 11 ரன்னிலும், மிட்செல் ஓவன் 0 ரன்னிலும் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடி 64 ரன் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் ஆஸி, 6 விக்கெட் இழப்புக்கு 186 ரன் எடுத்தது. அதையடுத்து, 187 ரன் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரர் அபிஷேக் சர்மா 16 பந்தில் 25 ரன் விளாசி சிறப்பான துவக்கம் தந்து ஆட்டமிழந்தார். சுப்மன் கில் 15, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்தில் 24, திலக் வர்மா 29, அக்சர் படேல் 17 ரன் எடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அதன் பின் இணை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், ஜிதேஷ் சர்மா, ஆஸி பவுலர்களின் பந்துகளை சிதறடித்து துவம்சம் செய்தனர். சுந்தர் 23 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 49, ஜிதேஷ் 13 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 22 ரன் விளாசியதால், 18.3 ஓவரில் இந்தியா 188 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இந்த வெற்றியின் மூலம், 1-1 என்ற புள்ளிக் கணக்கில் தொடர் சமநிலையில் உள்ளது.