மருத்துவமனைக்குள் பயங்கரம்; சிரியா அரசுப் படையினர் வெறியாட்டம்: பல ஊழியர்கள் சுட்டுக்கொலை
சுவைதா: சிரியாவில் அரசுப் படையினர் மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்களைச் சுட்டுக் கொல்லும் அதிர்ச்சிகரமான காணொலிக் காட்சி வெளியாகி உள்ளது. சிரியாவின் சுவைதா நகரில், ட்ரூஸ் இனப் போராளிகளுக்கும் சுன்னி இன பெடூயின் பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஜூலை மாதம் முதல் கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்காக அப்பகுதிக்குள் நுழைந்த அரசுப் படைகள், பெடூயின் பிரிவினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறைகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ட்ரூஸ் சமூகத்தின் தலைவர் ஷேக் ஹிக்மத் அல்-ஹிஜ்ரி கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலின் ராணுவத்தில் ட்ரூஸ் இனத்தவர் பலர் பணியாற்றுவதால், தங்கள் சமூகம் மீதான பெரும் படுகொலையைத் தடுப்பதில் இஸ்ரேலின் தலையீடு முக்கியப் பங்காற்றியதாக ட்ரூஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தேதி குறிப்பிடப்படாத காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளது. சுவைதா தேசிய மருத்துவமனைக்குள் படமாக்கப்பட்டுள்ள அந்தக் காட்சியில், சிரிய பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகங்களைச் சேர்ந்த வீரர்கள், மருத்துவமனை ஊழியர்களைத் துப்பாக்கி முனையில் தரையில் மண்டியிட வைத்துள்ளனர். அவர்களில் ஒருவர், வீரரால் கன்னத்தில் அறையப்பட்டதும் அவரைத் தள்ளிவிட முயல்கிறார். அடுத்த கணமே, அவர் மிக அருகில் இருந்து இரண்டு முறை சுடப்படுகிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மற்ற ஊழியர்களும் தரையில் விழுந்து உயிரிழக்கும் கொடூரக் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன. ஆனால் எத்தனை பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.