சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 2 அமெரிக்க வீரர்கள் உட்பட 3 பேர் பலி: பழிக்குப்பழி வாங்குவோம் என டிரம்ப் சபதம்
வாஷிங்டன்: சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகள் மறைந்திருந்து நடத்தியத் தாக்குதலில் 2 அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.சிரியாவில் கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கப் படையினர் மீது பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் தாக்குதல்கள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் சிரியாவின் உள்ளூர் படைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிரியாவின் மத்தியப் பகுதியான பால்மைரா நகரில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் படையினர் மீது ேநற்று ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க மொழிபெயர்ப்பாளர் என மொத்தம் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்த நிலையில், பதில் தாக்குதலில் அந்தப் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இச்சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘சிரியாவில் மூன்று சிறந்த தேசபக்தர்களை இழந்துள்ளோம்.
இதற்குக் காரணமானவர்களைச் சும்மா விடமாட்டோம்; நிச்சயம் இதற்குப் பழிக்குப்பழி வாங்குவோம்’ என்று சூளுரைத்துள்ளார். அதேபோல் அமெரிக்கப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் பீட் ஹெக்செத் வெளியிட்ட அறிக்கையில், ‘உலகில் எங்கு வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள், அமெரிக்கர்களைக் குறிவைத்தால், உங்களைத் தேடிக் கண்டுபிடித்து வேட்டையாடுவோம். உங்களின் எஞ்சிய வாழ்நாளைப் பயத்துடனே கழிக்க நேரிடும்’ என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.