சிட்னி மாரத்தான் எத்தியோப்பியா வீரர்; கிரோஸ் சாதனை வெற்றி: மகளிர் பிரிவில் அசத்திய ஷிபான்
சிட்னி: சர்வதேச அளவில் நடந்த சிட்னி மாரத்தான் ஓட்டப் போட்டியில், ஆடவர் பிரிவில் எத்தியோப்பியா வீரர் ஹெய்லிமர்யம் கிரோஸ், மகளிர் பிரிவில், நெதர்லாந்து வீராங்கனை ஷிபான் ஹசன் அபார வெற்றி பெற்றனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், சர்வதேச அளவில் மாரத்தான் ஓட்டப் போட்டிகள் நடந்தன. ஆடவர் பிரிவில் நடந்த போட்டியில், எத்தியோப்பியா வீரர் கிரோஸ் (28), 2 மணி 6 நிமிடம், 6 விநாடிகளில் போட்டி தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். முந்தைய சாதனை நேரத்தை விட, ஒரு நிமிடம் முன்னதாக அவர் இந்த சாதனையை படைத்தார். மற்றொரு எத்தியோப்பியா வீரர் அடிசு கோபேனா, 2ம் இடமும், லெசோதோ வீரர் தெபெலோ ராமகொங்கோனா 3ம் இடமும் பிடித்தனர்.
மகளிர் பிரிவில் நடந்த மாரத்தான் போட்டியில், நெதர்லாந்து வீராங்கனை ஷிபான் ஹசன், போட்டி தூரத்தை, 2 மணி, 18 நிமிடம், 22 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். கென்ய வீராங்கனை பிரிகிட் கோஸ்கெய், 34 விநாடிகள் பின்னே வந்து 2ம் இடம் பிடித்தார். எத்தியோப்பியா வீராங்கனை வொர்கனேஸ் எடிசாவுக்கு 3ம் இடம் கிடைத்தது. கடந்த ஆண்டு நடந்த மாரத்தான் போட்டியின் எடிசா முதலிடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.