ஒரே நேரத்தில் 2 வீரர்களுடன் நீச்சல் உடை அழகி ‘டேட்டிங்’: டென்னிஸ் ‘இரட்டை ஆட்டம்' என கிண்டல்
நியூயார்க்: யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின்போது, பிரபல நீச்சல் உடை மாடல் அழகி ஒருவர், இரு முன்னணி வீரர்களுடன் ஒரே நேரத்தில் டேட்டிங் உறவில் இருந்ததாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின்போது, ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ நீச்சல் உடை மாடல் அழகியான புரூக்ஸ் நேடர், முன்னணி டென்னிஸ் வீரர்களான கார்லோஸ் அல்காரஸ் மற்றும் ஜானிக் சின்னருடன் ஒரே நேரத்தில் காதல் உறவில் (டேட்டிங்) இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆரம்பத்தில், ஜானிக் சின்னருடன் புரூக்ஸ் நேடர் காதலில் இருப்பதாக அவரது சகோதரி சூசகமாகத் தெரிவித்திருந்தார். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஜானிக் சின்னருடனான உறவு குறித்து கேட்கப்பட்டபோது, புரூக்ஸ் வெட்கத்துடன் பதிலளித்தது இந்த வதந்திக்கு வலுசேர்த்தது. ஆனால், யு.எஸ். ஓபன் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின்போது, கார்லோஸ் அல்காரஸை உற்சாகப்படுத்தும் வகையில் புரூக்ஸ் நேடர் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்தது, அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
பின்னர், புரூக்ஸ் நேடார் உண்மையில் அல்காரஸுடன் தான் உறவில் இருப்பதாக அவரது சகோதரி உறுதிப்படுத்தினார். இந்த நிலையில், புரூக்ஸ் நேடர் போட்டியின்போது அல்காரஸ் மற்றும் ஜானிக் சின்னர் ஆகிய இருவருடனும் ஒரே நேரத்தில் காதலில் இருந்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை ‘இரட்டையர் ஆட்டம்’ (டேட்டிங்) என ஊடகங்கள் கிண்டலாக வர்ணித்துள்ளன. ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ பத்திரிகையின் மூலம் பிரபலமான புரூக்ஸ் நேடர், தனது சகோதரிகளுடன் ‘லவ் தை நேடர்’ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இதற்கு முன்னரும் பல பிரபலங்களுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
தற்போது எழுந்துள்ள இந்தப் புதிய குற்றச்சாட்டு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இருப்பினும், இந்த வதந்திகள் குறித்து கார்லோஸ் அல்காரஸ் மற்றும் ஜானிக் சின்னர் ஆகிய இருவரும் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.