பெண் பத்திரிகையாளர் குறித்த பேச்சு; நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் கோரிக்கை
புதுடெல்லி: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து எஸ்.வி.சேகர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெண்களை இழிவாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்பதா என்பதும் அதனை எப்படி ஏற்க முடியும் என்றும் எஸ்.வி.சேகருக்கு சரமாரி கேள்வி எழுப்பியிருந்தது. மேலும் சரணடைவதில் இருந்தும் அவருக்கு விலக்கு அளித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகையாளரை நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.
அவரது நண்பர்கள் மூலம் அவரிடம் தன்னுடைய தரப்பு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறேன். அதே போன்று தனது மன்னிப்பு கடிதத்தை விரிவாக அவரிடமும் சமர்ப்பித்து உள்ளோம். அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. எனவே இந்த விவகாரத்தில் நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறதோ அதை தயவு செய்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், இந்த மனு தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. மேலும் எஸ்.வி.சேகருக்கு கைது நடவடிக்கையில் இருந்து வழங்கப்பட்ட இடைக்கால நிவாரணம் தொடரும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.