சஸ்பெண்ட் செய்யப்பட்ட தாய்லாந்து பிரதமர் பதவி பறிப்பு: நீதிமன்றம் அதிரடி
பாங்காக்: தாய்லாந்து நாட்டில் கடந்த ஓராண்டாக பிரதமர் பதவி வகித்து வந்தவர் பேடோங்டர்ன் ஷினாவத்ரா. பெண் பிரதமரான இவர் எல்லை பிரச்னை தொடர்பாக கம்போடியா நாட்டு செனட் தலைவர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவரிடம் நட்பு பாராட்டிய ஷினாவத்ரா, தாய்லாந்து ராணுவ ஜெனரலை குறைகூறுவது போல் பேசியது தாய்லாந்து நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவர் மீதான வழக்கு தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது ஷினாவத்ரா பிரதமர் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துணை பிரதமர் பும்தம் வெச்சாயாச்சாய் அடுத்ததாக பொறுப்பு பிரதமராக நியமிக்கப்பட்டார். அவரது அமைச்சரவையில் ஷினாவத்ராவும் இடம் பிடித்து இருந்தார். இந்த நிலையில் ஷினாவத்ரா மீதான வழக்கில் நேற்று தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதில் ஷினாவத்ராவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. இதையடுத்து பொறுப்பு பிரதமராக உள்ள பும்தம் தலைமையிலான அமைச்சரவை சார்பில் ஒரு புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை பதவியில் இருக்கும் என்று தெரிகிறது. தற்காலிக அமைச்சரவை நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.