சஸ்பெண்டான பேராசிரியர் பெரியசாமி பெரியார் பல்கலை.யில் நுழைய தடை
சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக இருந்தவர் பேராசிரியர் பெரியசாமி. இவர் போலி அனுபவ சான்றிதழ்களை கொடுத்து பணியில் சேர்ந்தது, நிர்வாகத்தில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். இதனையடுத்து சமீபத்தில் அவரது துறைத்தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அதே சமயம், தங்களை முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விடாமல் தடுத்ததாக, தமிழ்த்துறையில் பி.எச்டி., ஆய்வு மேற்கொண்ட மாணவர்கள் புகார் ஒன்றை அளித்தனர்.
அதில், 19 முனைவர் பட்ட ஆய்வாளர்களை பயில விடாமல் செய்தது, சாதி பெயரைச் சொல்லி மாணவர்களை இழிவுபடுத்தியது, அலுவல் நிலை பணியாளர்களைத் தரக்குறைவாக பேசியது, பேராசிரியர்களை நாகரீகமற்ற முறையில் திட்டியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர். இதுகுறித்து விசாரிக்க கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் டீன் மணியன் தலைமையில், சிண்டிகேட் உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி மற்றும் வெங்கடாஜலம் ஆகியோர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டது.
விசாரணையில், பேராசிரியர் பெரியசாமி மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மீது பல்கலைக்கழக விதிகளின்படி துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அக்குழு பரிந்துரை வழங்கியது. இதன் அடிப்படையில் பேராசிரியர் பெரியசாமியை சஸ்பெண்ட் செய்து, பல்கலைக்கழக நிர்வாகக்குழு உத்தரவிட்டுள்ளது.
தடை
தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள பேராசிரியர் பெரியசாமி சாட்சியங்களை மிரட்டி கலைக்கவும், ஆவணங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனையடுத்து அவரை, பெரியார் பல்கலைக்கழகத்திற்குள் அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ேமலும், முன் அனுமதியின்றி சேலத்தை விட்டு அவர் வெளியே செல்லவும் கூடாது என, பெரியார் பல்கலைக்கழக நிர்வாக குழு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.