ஆசிய கோப்பை கிரிக்கெட்: பயிற்சியை தொடங்கிய சூர்யகுமார் யாதவ்
மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப். 9ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. ஏராளமான இளம் வீரர்கள் பார்மில் இருப்பதாலும், கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் மீண்டும் டி.20 போட்டியில் களம் இறங்க தயாராக இருப்பதாலும் அணியில் இடம் பெறப்போவது யார், யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய டி.20 அணியின் கேப்டனாக உள்ள சூர்யகுமார் யாதவ், வயிறு பகுதியில் தசை பிடிப்பால் அவதிப்பட்ட நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன் ஜெர்மனிக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
ஆசிய கோப்பை தொடருக்கு முன் உடற்தகுதியை எட்டுவதற்காக அவர் பயிற்சியை தொடங்கி உள்ளார். பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியின் சிறப்பு மையத்தில் பயிற்சியை மேற்கொண்டுள்ள அவர் விரைவில் தனது உடற்தகுதியை நிரூபிப்பார் என தெரிகிறது. இதனிடையே ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்குவார். சுப்மன் கில் 3வது வரிசையில் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.