7 இன்னிங்சில் 72 ரன்... சூர்யா பேட்டிங் குறித்து கொஞ்சம்கூட கவலை இல்லை: காம்பீர் சொல்கிறார்
சிட்னி: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்குகிறது. சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அண்மையில் ஆசிய கோப்பையை வென்று நல்ல உத்வேகத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவ், சமீபகாலமாக பேட்டிங்கில் தடுமாறி வருகிறார். 7 இன்னிங்சில் அவர் 72 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் டி20 தொடர் குறித்து இந்திய அணி பயிற்சியாளர் காம்பீர் கூறியதாவது:-உண்மையை சொல்ல வேண்டுமென்றால் சூரியகுமார் யாதவ் பேட்டிங் பார்ம் குறித்து எங்களுக்கு கொஞ்சம் கூட கவலை கிடையாது. ஏனென்றால் நாங்கள் மிகவும் ஆக்ரோஷமாக பேட்டிங் செய்யவேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றி வருகின்றோம். இப்படி ஒரு கொள்கையை நீங்கள் கடைப்பிடிக்கும் போது கண்டிப்பாக பேட்டிங்கில் பல தோல்விகள் ஏற்படும். அதை தடுக்க முடியாது சூரியகுமார் யாதவ் நினைத்தால் சுலபமாக 30 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து சர்ச்சைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அதிரடியாக ஆட நினைத்து பேட்டிங்கில் ரன் சேர்க்காமல் போனால் அதனை ஏற்றுக் கொள்ளும் நடைமுறைக்கு நாங்கள் வந்துவிட்டோம். எங்கள் அணியில் தற்போது அபிஷேக் ஷர்மா நல்ல பார்மில் இருக்கின்றார். ஆசியக் கோப்பை தொடரில் முழுவதும் அவர் சிறப்பாக செயல்பட்டார்.
இதேபோன்று சூரிய குமார் தன் பேட்டிங் விதத்தை கண்டுபிடித்துவிட்டார் என்றால் ஒட்டுமொத்த பொறுப்பையும் அவர் எடுத்துக் கொள்வார். டி20 கிரிக்கெட் பொறுத்த வரை தனி நபர் வீரன் மீது நாங்கள் கவனம் செலுத்துவது கிடையாது. டி20 கிரிக்கெட்டை எப்படி விளையாடுகிறோம் என்பதில் தான் எங்கள் கவனம் இருக்கின்றது. எங்கள் அதிரடியான ஆட்டத்தால் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தடுமாறலாம். ஆனால் ரன்களை விட எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பது தான் முக்கியம்.சூரியகுமார் ஒரு நல்ல மனிதர். நல்ல மனிதனால் தான் நல்ல தலைவராக இருக்க முடியும். இது சூரியகுமார் யாதவின் அணி. நாங்கள் யாரும் தவறுகளை நினைத்து அச்சப்படுவது கிடையாது. ஆட்டம் எவ்வளவு பெரியதாக மாறுகிறதோ, அந்த அளவுக்கு நாமும் ஆக்ரோஷமாகவும் பயம் இல்லாமல் விளையாட வேண்டும். எங்கள் அணியில் இருக்கும் திறமையை வைத்துக்கொண்டு எங்களால் பயமின்றி விளையாட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.