மகாலிங்கபுரத்தில் சூறைக்காற்றுக்கு சேதமான கண்காணிப்பு கேமராக்கள்
*சீரமைக்க மக்கள் கோரிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மிகுந்த இடமான பஸ்நிலையம் அருகே, நியூஸ்கீம் ரோடு, காந்தி சிலை, மகாலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்செயல்களை தடுக்கவும். விதிமீறி செல்லும் வாகனங்களை கண்காணிக்கவும் போலீசார் சார்பில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டது.
இதில் மகாலிங்கபுரம் பகுதியில் சுமார் 8க்கும் மேற்பட்ட கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. ஆனால் இந்த கண்காணிப்பு கேமராக்களின் ஒருசில கேமராக்கள், சில மாதத்திற்கு முன்பு பலத்த சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு செயலிழந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. அதிலும் சில கேமரா அறுந்து தொங்கி கொண்டிருக்கிறது. இதனால் அந்த கேமராவில் செயல்பாடு தற்போது நின்று போனது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மகாலிங்கபுரம் பகுதியில்,குற்றச்செயல்களை தடுக்க அமைக்கப்பட்ட இந்த கண்காணிப்பு கேமரா அறுந்து தொங்குவதால், தற்போது அந்த வழியாக விதிமீறி செல்லும் வாகனங்களை கண்காணிக்க முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். எனவே பழுதான கேமராவை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.