சுரேஷ் கோபி படப்பிடிப்பில் செயற்கை குண்டுவெடிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி: நில நடுக்கம் ஏற்பட்டதாக வீட்டை விட்டு ஓட்டம்
திருவனந்தபுரம்: ஒன்றிய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம், எரிவாயுத்துறை இணை அமைச்சராக இருக்கும் நடிகர் சுரேஷ் கோபி சினிமாவிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சுரேஷ் கோபி தற்போது கொம்பன் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக இடுக்கி மாவட்டம் வாகமண் மலைப்பகுதியில் நடைபெற்று வந்தது.
இதற்காக அப்பகுதியில் தொழிற்சாலைகள் போல செட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது போல பயங்கர சத்தம் கேட்டது. அப்போது வீடுகளில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அப்பகுதியினர் நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டதோ என கருதி வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
ஆனால் அது சுரேஷ் கோபியின் படப்பிடிப்புக்காக நடத்தப்பட்ட செயற்கை குண்டுவெடிப்பு என பின்னர்தான் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தங்களிடம் முன்கூட்டியே தெரிவிக்காமல் எப்படி செயற்கை குண்டு வெடிப்பை நடத்தலாம் என்று கூறி பொதுமக்கள் படப்பிடிப்பு குழுவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து படப்பிடிப்புக் குழு படப்பிடிப்பை ரத்து செய்தது.