சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 15 அம்ச வழிகாட்டுதல்கள் திறமை அடிப்படையில் மாணவர்களை பிரிக்க தடை: கல்வி நிறுவன தற்கொலைகளை தடுக்க யுஜிசி எச்சரிக்கை
புதுடெல்லி: மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கும் நோக்கில், கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய 15 அம்ச புதிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பல்கலைக் கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்களில் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கும் பொருட்டு, ஜூலை 15ம் தேதி கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பான 15 அம்ச வழிகாட்டு நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது. மாணவர்களின் மனநலன் குறித்த தேசியப் பணிக்குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை, இந்த இடைக்காலப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் நடைமுறையில் இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின்படி, நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் மனநலத்தில் பயிற்சி பெற்ற, தகுதி வாய்ந்த ஒரு மனநல ஆலோசகர், உளவியலாளர் அல்லது சமூகப் பணியாளரை நியமிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட நிறுவனங்கள், வெளி மனநல வல்லுநர்களுடன் முறையான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், மாணவர் - ஆலோசகர் விகிதத்தை உகந்த அளவில் பராமரிப்பதோடு, குறிப்பாகத் தேர்வு மற்றும் கல்விநிலை மாற்றங்களின் போது, சிறிய மாணவர் குழுக்களுக்குத் தனிக் கவனம் செலுத்த வழிகாட்டிகள் அல்லது ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள், மாணவர்களை அவர்களின் கல்வித் திறனின் அடிப்படையில் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரிப்பதைத் தவிர்க்க வேண்டும். பொதுவெளியில் அவர்களை அவமானப்படுத்துவதையோ அல்லது அவர்களின் கல்வித் திறனுக்கு மீறிய கல்வி இலக்குகளை ஒதுக்குவதையோ, திணிப்பதையோ நிறுத்த வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத அனைத்துப் பணியாளர்களுக்கும், சான்றளிக்கப்பட்ட மனநல வல்லுநர்களைக் கொண்டு ஆண்டுக்கு இருமுறை கட்டாயப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். உளவியல் முதலுதவி, எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிதல், தற்கொலை முயற்சி போன்ற சூழல்களைக் கையாளுதல் மற்றும் பரிந்துரை வழிமுறைகள் குறித்து இந்தப் பயிற்சியில் விளக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்படக்கூடிய மற்றும் விளிம்புநிலை சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை உணர்வுப்பூர்வமாகவும், அனைவரையும் உள்ளடக்கிய வகையிலும், பாகுபாடின்றியும் அணுகுவது குறித்து அனைத்துப் பணியாளர்களுக்கும் போதுமான பயிற்சி அளிக்க வேண்டும். இதனை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். அத்துடன், கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமை, துன்புறுத்தல், ராகிங் மற்றும் சாதி, வர்க்கம், பாலினம், பாலியல் நாட்டம், மாற்றுத்திறன், மதம் அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் கொடுமைப்படுத்துதல் போன்ற நிகழ்வுகளைத் தடுக்கவும், அவை குறித்துப் புகாரளிக்கவும், அவற்றிற்குத் தீர்வு காணவும் வலுவான, ரகசியமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு தனது வழிகாட்டுதலில் உத்தரவிட்டுள்ளது.