உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு பதவி உயர்வு பட்டியல் வெளியீடு: பதிவுத்துறை விளக்கம்
சென்னை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கை: பதிவுத்துறையில் காலியாக உள்ள உதவி பதிவுத்துறை தலைவர் பணியிடங்களை நிரப்பவும், பதிவுப் பணி தொய்வில்லாமல் நடைபெறவும், மக்களுக்கு பதிவு சார்ந்த சேவைகளை வழங்குவதை துரிதப்படுத்தவும் பதிவுத்துறையின் நிர்வாக நலன்களை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள சட்டவிதிகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் கடந்த 31ம் தேதி 30 தகுதி வாய்ந்த மாவட்டப்பதிவாளர்களை உள்ளடக்கி 2022-2023ம் ஆண்டிற்கான உதவி பதிவுத்துறை தலைவர் தற்காலிக தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தீர்ப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு விதியை பின்பற்றி 1997-98 ஆண்டு முதலான இரண்டாம் நிலை சார்பதிவாளர் மற்றும் அதற்கு பின்னர் வெளியிடப்பட்ட உயர் பதவிகளுக்கான பட்டியல்களை திருத்தம் செய்திட ஆணையிடப்பட்டது. மேற்கண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே 2009-10 முதல் 2019-2020 வரையிலான ஆண்டுகளுக்கான மாவட்டப்பதிவாளர் தேந்தோர் பெயர் பட்டியல் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பட்டியலாக 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நாளிட்ட அரசாணையின் படி வெளியிடப்பட்டது.
அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட மாவட்டப்பதிவாளர் தேர்ந்தோர் பெயர் பட்டியல்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டவாறு இட ஒதுக்கீடு சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்ட உதவி பதிவுத்துறை தலைவர் தேர்ந்தோர் பட்டியலுக்கு மேற்கூறப்பட்ட இட ஒதுக்கீடு அடிப்படையிலான 131 நபர்கள் அடங்கிய மாவட்டப்பதிவாளர் முதுநிலை பட்டியல் கருத்தில் கொள்ளப்பட்டது. மேற்குறிப்பிட்ட 131 நபர்களில், ஒரு சிலர், மாவட்டப்பதிவாளர் நிலையில் 2 ஆண்டுகள் பணி முடித்து தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாத நிலையில், உதவிப்பதிவுத்துறை தலைவர் தற்காலிக தேர்ந்தோர் பட்டியலில் சேர்த்திட இவர்கள் பரிசீலிக்கப்படவில்லை.
எனவே மேற்படி முதுநிலை பட்டியலில் இடம்பெற்றுள்ள 131 நபர்களில் மாவட்ட பதிவாளர் பதவியில் தகுதிகாண் பருவம் நிறைவு செய்த மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இல்லாத தகுதி வாய்ந்த 30 நபர்களை உள்ளீடு செய்து உதவி பதிவுதுறைத் தலைவர் தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனவே, மேற்படி பதவி உயர்வு பட்டியல் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டே வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.