உச்ச நீதிமன்ற விசாரணைக்கு தெருநாய்கள் வழக்கு மாற்றம்
மதுரை:மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘‘மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் நடந்து செல்வோர் மற்றும் வாகன ஓட்டிகளை நாய்கள் விரட்டுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தெருவில் விளையாடக்கூடிய குழந்தைகள் மற்றும் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளும் பெரிதும் பாதிக்கின்றனர். தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதுகுறித்து முறையிட்டும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாநிலம் முழுவதும் பராமரிப்பின்றி சுற்றித் திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள்முருகன் ஆகியோர், ‘‘தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து, சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இதைப்போல அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களிலும் உள்ள வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கூறியுள்ளனர். தெருநாய் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் சேர்த்து விசாரிக்கவுள்ளது. எனவே, இந்த மனு மற்றும் இதே கோரிக்கையுடன் நிலுவையில் உள்ள அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.