உச்ச நீதிமன்றத்தில் விசாரணை முடிந்தது தெரு நாய் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
புதுடெல்லி: டெல்லியில் தெரு நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக விலங்கின ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வழக்கு விசாரணை 3 நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விலங்கின ஆர்வலர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், “இந்த விவகாரத்தில் நோட்டீஸ் எதுவும் அனுப்பாமலும், உரிய விசாரணை எதுவும் நடத்தாமலும் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க கூடாது” என்று கேட்டுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,\\” இந்த விவகாரத்தில் மேம்போக்கான வாதங்களை முன்வைக்க வேண்டாம். உங்களிடம் ஆதாரங்கள் உள்ளதா, அப்படி இருந்தால் இங்கே வாதங்களை முன்வைக்கலாம். டெல்லி அரசின் செயலற்றதன்மையால்தான் இந்த நிலை உருவாகி உள்ளது.
தெரு நாய் விவகாரத்தில் சட்டங்கள் உருவாக்கப்பட்டு, ஆனால் அவை அமல்படுத்தப்படவில்லை. இதன் காரணமாகதான் பிரச்னை உருவாகி உள்ளது. தெரு நாய்கள் விவகாரத்தில் ஏற்கனவே விதிமுறைகளும், சட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுவது இல்லை. ஒரு பக்கம் மனிதர்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள், இன்னொரு பக்கம் விலங்குகள் நல ஆர்வலர்கள் தெரு நாய்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள்” என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.