மசோதாக்களுக்கு ஒப்புதல் விவகாரம் ஜனாதிபதியின் 14 கேள்விகள் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு
புதுடெல்லி: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து அனைத்து விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம், மற்றும் துணைவேந்தர் நியமனம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மூன்று வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தும் இருந்த பத்து மசோதாக்களுக்கு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி ஒப்புதல் வழங்கி தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு, சுமார் 14 கேள்விகளுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி அனுப்பி வைத்தார். இதையடுத்து குடியரசுத் தலைவர் கேள்வி தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூரியகாந்த் , விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா மற்றும் ஏ.எஸ்.சந்துருகர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு பத்து நாட்கள் விரிவாக விசாரணை நடத்தி , கடந்த செப்டம்பர் 11ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது.