உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு கட்டாய கல்வி உரிமைக்கான நிதி தமிழ்நாட்டிற்கு கிடைக்கும்: அமைச்சர் நம்பிக்கை
சென்னை: அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அரசு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பார்க்கும் வகையில் கல்லூரிக் களப்பயணம் செல்லும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் அண்ணா பல்கலைக் கழகத்துக்கு பிளஸ் 2 மாணவ, மாணவியர் நேற்று கல்லூரி களப்பயணம் சென்றனர்.
இந்த நிகழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு கூறியதாவது:
தமிழகத்தில் பள்ளிகளில் இருந்து 70 சதவீதம் முதல் 77 சதவீதம் பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த கலைப் பயணம் அதற்கு துணையாக இருக்கிறது. இதுபோல குழந்தைகளை அழைத்து வருவதன் மூலம் அவர்களுக்கு கல்லூரிகள் தொடர்பான அச்சம் போகும். ஊக்கம் பெறுவார்கள்.
புதிய கண்டுபிடிப்புகள், ஆய்வு முறைகள் குறித்து குழந்தைகள் தெரிந்து கொள்ள முடியும். அண்ணா பல்கலையில் படிக்கும் 3ம் ஆண்டு மாணவர்கள், பிளஸ்2 மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர். இதுபோன்ற கலைப்பயணத்தில் சேரும் போது நல்ல கல்லூரிகளை மாணவர்கள் தேர்வு செய்து சேர முடியும். கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்கள் இன்னும் சரியாக பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது. அரசின் பணி சேவை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு எந்த பள்ளியாக இருந்தாலும் மாணவர்களுக்கான தான் நடத்தப்படுகிறது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை பொறுத்தவரையில் குழந்தைகளுக்கான கல்வி என்பது நமது உரிமை. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ஏழை எளிய நிலையில் உள்ள குழந்தைகள் சேர்ந்து படிப்பதற்கான நிதி இன்னும் ரூ.600 ேகாடி வரவேண்டியுள்ளது. தனியார் பள்ளிகளில் சேரும் நலிந்த நிலை குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய நிதியை நம்பி பல பள்ளிகள் உள்ளன. அதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது.
இந்த கட்டாய கல்வி உரிமைக்கான நிதியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு வழங்குவார்கள் என்று நம்புகிறோம். இந்த திட்டத்தின் கீழ் 1 லட்சம் மாணவ, மாணவியர் நிதி பெற்று படித்து வருகின்றனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியை நாம் இரண்டு வகையாக பார்க்க வேண்டியுள்ளது. ஒன்று ஏழை எளிய குழந்தைகளுக்கானது. இன்னொன்று அனைவருக்குமானது.
அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நமது நாடாளுமன்ற உறுப்பினர் உடலை வறுத்திக் கொண்டு கேட்கும் நிலை இருக்கிறது. இப்ேபாதாவது அவர்கள் மனமிரங்கி அந்த நிதியை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.