கணவர் குடும்பத்தை பழிவாங்க பயன்படுத்தப்படும் 498ஏ சட்டப்பிரிவால் சுப்ரீம் கோர்ட் மீண்டும் கவலை: இதற்கு மேல் சொல்ல விரும்பவில்லை என நீதிபதி ஆதங்கம்
புதுடெல்லி: வரதட்சணை கொடுமை சட்டப்பிரிவான 498ஏ, தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் மீண்டும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. திருமணமான பெண்ணுக்கு எதிரான கொடுமைகளைத் தண்டிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் வரதட்சணை கொடுமை சட்டப்பிரிவான 498ஏ, சமீப காலமாகத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றம் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகிறது.
கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கில், தெளிவற்ற மற்றும் பொதுவான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தச் சட்டம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. கடந்த காலங்களில் பல வழக்குகளில், தொலைதூர உறவினர்கள் மற்றும் வயதான பெற்றோரைக் கூட வழக்கில் சிக்க வைக்கும் போக்கைக் கண்டித்துள்ள நீதிமன்றம், சில நேரங்களில் பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான பிரிவுகளுடன் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம், இந்தப் பிரிவை புதிய சட்டமான பிஎன்எஸ் சட்டப் பிரிவில் சேர்ப்பதற்கு முன்பு மறுபரிசீலனை செய்யுமாறு நாடாளுமன்றத்தைக் கேட்டுக்கொண்டது. இருப்பினும், இந்தப் பிரிவின் தவறான பயன்பாட்டிற்காக அதை அரசியலமைப்பிற்கு விரோதமானது என அறிவிக்க முடியாது எனவும், உண்மையான பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக விளங்குகிறது எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில், திருமணமான ஒன்றரை மாதத்தில் ஒரு பெண் தனது கணவர் மீது 498ஏ பிரிவின் கீழ் புகார் அளித்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி நாகரத்னா, ‘தவறான புகார்கள் காரணமாக, இப்போதெல்லாம் மாமியாரும் கணவரும் மனைவி குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. நாங்கள் இதுபோன்ற பல புகார்களை ரத்து செய்துள்ளோம். எல்லா வழக்குகளும் பொய்யானவை என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் 498ஏ மிகவும் கொடூரமானது மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டப்பிரிவு, குடும்ப உறவில் எலுமிச்சையைப் பிழிவதைப் போன்றது. இதற்கு மேல் நாங்கள் எதுவும் சொல்ல விரும்பவில்லை’ எனக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட கணவன், மனைவி மற்றும் மாமியார் ஆகியோர் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க மத்தியஸ்தம் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.