ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உயிரியல் பூங்காவில் விதி மீறல்கள் இல்லை : உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி : ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உயிரியல் பூங்காவில் விதி மீறல்கள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் 'வந்தாரா' விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விலங்குகள் குறிப்பாக யானைகள் சட்டவிரோதமாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டவை என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. விலங்குகள் நல அமைப்புகள், ஆர்வலர்கள் தரப்பில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். மனுவில் வந்தாரா மையத்தின் செயல்பாடுகள் குறித்து சுகின் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பங்கஜ் மிதல் மற்றும் பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு, வந்தாரா கிரீன்ஸ் விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது. இந்த வழக்கில் இன்று ’வந்தாரா’ விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு, விதிகளின்படியே வெளிநாட்டில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இதில் எந்தவித விதிமீறல் ஏதும் இல்லை எனவும் சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் உயிரியல் பூங்காவில் விதி மீறல்கள் இல்லை என்றும் வந்தாரா மறுவாழ்வு முகாமிற்கு விதிமுறைகளின் படியே விலங்குகள் வாங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தது. மேலும் இது தொடர்பான வழக்கின் விசாரணையில், முழு அறிக்கையை விரிவாகப் பார்க்கலாம் எனவும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.