தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை மாற்ற முடியாது :உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
டெல்லி : ஆளுநர் அதிகாரம் தொடர்பான தமிழ்நாடு அரசின் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை 5 நீதிபதிகள் அமர்வு மாற்றாது என நீதிபதி சூர்யகாந்த் கூறினார். சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதா மீது ஆளுநர் 3 மாதத்தில் முடிவெடுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் காலவரையின்றி முடிவு எடுக்காமல் இருக்க முடியாது என்றும் தீர்ப்பளித்திருந்தது.
பல மாதம் நிலுவையில் இருந்த மசோதாக்கள் ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு தொடர்பாக 14 கேள்விகளை எழுப்பி உச்சநீதிமன்றத்திடம் ஐனாதிபதி விளக்கம் கேட்டுள்ளார். 14 கேள்விகள் தொடர்பான விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் நடைபெற்றுவருகிறது.
வழக்கு விசாரணையின்போது, ஆளுநர் வழக்கில் தீர்ப்பை மாற்ற முடியாது எனவும், ஆளுநர் அதிகாரம் குறித்து நீதிபதிகளின் தீர்ப்பு பற்றி விளக்கம் மட்டுமே உச்சநீதிமன்றம் வழங்கும் என தலைமை நீதிபதி கூறினார்.
தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் சட்டம் தொடர்பான கருத்துகளை மட்டுமே உச்சநீதிமன்றம் கூற உள்ளது. தமிழ்நாடு அரசின் வழக்கில் அளித்த தீர்ப்பு பற்றி எந்த கருத்தும் சொல்ல மாட்டோம். தற்போது ஆலோசனை வழங்கவே அமர்வு அமைக்கப்பட்டுள்ளதே தவிர ,இது மேல்முறையீட்டு அமர்வு அல்ல என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.