வந்தாரா விலங்குகள் மைய விவகாரம்: ஒன்றிய அரசு, மாநில அரசுகள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், ”அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய பல்வேறு உயிரினங்கள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வந்தாரா மையத்தில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை கைப்பற்றி வனத்தில் சுதந்திரமாக விடுவிக்க வேண்டும். அதேப்போன்று யானைகள் அனைத்தையும் காப்பாற்ற வேண்டும். வந்தராவில் வளர்க்கப்பட்டு வரக்கூடிய விலங்குகள் அனைத்தும் மறுவாழ்வு என்ற பெயரில் சுமார் 1.5 லட்சம் விலங்குகள் மற்றும் பறவைகள் சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ளன. அதில் பல பறவைகள், யானைகள் உயிரிழந்துள்ளன. எனவே வந்தாராவில் நடைபெறும் சட்டவிரோத நடவடிக்கைளை விசாரிக்க உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் உயர்மட்ட குழு அமைக்க வேண்டும்.
ஏற்கனவே திரிபுரா உயர்நீதிமன்றம் அமைத்த வந்தாரா விசாரணை குழுவையும் கலைக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவானது நீதிபதிகள் பங்கஜ் மித்தல் மற்றும் பி.எஸ்.வராலே அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் ஆனந்த் அம்பானியின் வந்தாரா விலங்குகள் நலவாழ்வு மையம் ஆகியவை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. அனைத்து எதிர்மனுதாரர்களுக்கும் இந்த வழக்கு தொடர்பான மனுவின் நகலை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.