அரசியல் சண்டைகளுக்கு அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் : உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
டெல்லி :“அரசியல் மோதல்களுக்கு ஏன் ED பயன்படுத்தப்படுகிறது?” என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பி உள்ளார். MUDA என்கிற மைசூர் நகர்புற மேம்பாட்டு ஆணைய ஊழல் வழக்கில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மனைவி பார்வதிக்கு அமலாக்கத்துறை வழங்கிய சம்மன்களை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வினோத் சந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மகாராஷ்டிராவில் தனக்கு நிகழ்ந்த மோசமான நிகழ்வை நினைவு கூர்ந்த தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகளை வாயை கிளறாதீர்கள், எங்கள் வாயை கிளறினால் கடுமையாக விமர்சிக்க வேண்டியிருக்கும் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் நாடு முழுவதும் அரசியல் சண்டைகளுக்கு அமலாக்கத்துறையை ஆயுதமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை எச்சரித்த நீதிபதிகள், அரசியல் மோதலை தேர்தல் களத்தில் மட்டுமே கடைப்பிடிக்க அறிவுறுத்தினர். அத்துடன் அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.