தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டால் 3 மாதங்களில் வழங்கப்பட வேண்டும் - உச்சநீதிமன்றம்
டெல்லி : நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 11 லட்சத்து 50,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றம் ஒரு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தால், அடுத்த 3 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் காலநிர்ணயம் செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதிகள் சஞ்சய் கரோல், பிரசாந்த் குமார் மிஸ்ரா அமர்வு அலகாபாத் உயர்நீதிமன்றத்திலிருந்து பெற்றனர்.
அதில், கடந்த ஆண்டுகளாக இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், ஒரு வழக்கின் விசாரணை முடிந்து, இத்தனை ஆண்டுகளாக தீர்ப்பு வழங்கப்படாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய விஷயம் என்று கூறினர். இதனையடுத்து அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் பொருந்தக்கூடிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை நீதிபதிகள் வெளியிட்டனர். அதில் ஒரு வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டாலும், அதிலிருந்து மூன்று மாதத்திற்குள் அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஒரு வேளை தீர்ப்பு வழங்கப்படவில்லை என்றால், சம்மந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர், அந்த வழக்கை ஐகோர்ட் தலைமை நீதிபதியின் அமர்வு முன் பட்டியலிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் வழக்கை விசாரித்த அமர்விடம், அடுத்த இரண்டு வாரத்தில் தீர்ப்பை வழங்கும்படி தலைமை நீதிபதி உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.