நாடு முழுவதும் சாலைகளில் சுற்றித்திரியும் தெரு நாய்கள், கால்நடைகளை உடனடியாக அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு!!
டெல்லி: நாடு முழுவதும் தெரு நாய்கள் பிரச்சினை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கூடுதல் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு ஏற்கனவே பிறப்பித்து இருந்த நிலையில், இன்றைய தினம் நீதிபதிகள் வேறு சில முக்கிய உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளனர். அதன்படி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள், கால்நடைகள் உட்பட அனைத்து விலங்குகளையும் உடனடியாக பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதனை உரிய காப்பகத்தில் விட வேண்டும். இது தொடர்பாக நெடுஞ்சாலை ரோந்து குழுவை அமைக்க அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மேலும் உத்தரவிட்டுள்ள நீதிமன்றம்; நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள், ரயில்வே நிலையங்களில் தெருநாய்கள் நுழைய முடியாத அளவுக்கு வேலிகள் அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 வாரங்களில் தெரு நாய்களைக் கண்டறிந்து, 8 வாரங்களுக்குள் மாநில அரசு இதை மேற்கொள்ள வேண்டும். தெருநாய்கள் குறித்து தகவல் அளிக்க ரோந்து குழு ஒன்றை அமைக்க வேண்டும். மேலும், அப்புறப்படுத்திய நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, கருத்தடை செய்து காப்பகத்தில் சேர்க்க வேண்டும். தொல்லை தரும் இடங்களில் பிடிக்கப்பட்ட தெரு நாய்களை அங்கேயே விடுவது, அதன் மொத்த நோக்கத்தையே சிதைத்து விடும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.