வழக்கு விவரங்களை அறிய வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பக்கூடாது : உச்சநீதிமன்றம்
டெல்லி: குற்றம் சாட்டப்பட்டவருக்கு சட்ட அறிவுரைகளை வழங்கும் வழக்கறிஞர்களுக்கு தன்னிச்சையாக சம்மன் அனுப்பக்கூடாது என அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் பிரபல மூத்த வழக்கறிஞர்களான அரவிந்த் தாதர் மற்றும் பிரதாப் வேணுகோபால் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. வழக்கறிஞர்களுக்கு தன்னிச்சையாக சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில், "உரிய காரணமின்றி, வழக்கு விவரங்களை அறிய வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பக்கூடாது. விசாரணை அமைப்புகள் வழக்கறிஞர்களுக்கு தன்னிச்சையாக சம்மன் அனுப்பக் கூடாது. சம்மன் அனுப்பினால் எந்த விதியின் கீழ் அனுப்பப்படுகிறது என்பதை விசாரணை அமைப்பு தெரியப்படுத்த வேண்டும். எஸ்.பி. அந்தஸ்திலான மூத்த அதிகாரியின் ஒப்புதல் பெற்ற பிறகே விதிவிலக்கான சம்மனும் அனுப்பப்பட வேண்டும்.
விதிவிலக்காக சம்மன் அனுப்புவதற்கான காரணத்தை எழுத்துப் பூர்வமாக அதிகாரி ஒப்புதல் அளிக்க வேண்டும். விதிவிலக்காக அனுப்பப்படும் சம்மனும் உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டதே. வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர், வழக்கு விவரங்களை தெரிவிக்கக் கூடாது என்ற கடமை உள்ளது. நீதிமன்றங்களில் தொழில் புரியாமல் நிறுவனத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டாது. வழக்கறிஞர்களிடம் இருந்து கைப்பற்றப்படும் டிஜிட்டல் ஆவணங்கள் நீதிமன்றத்தில் முன்பாக மட்டுமே ஆய்வு செய்யப்பட வேண்டும். "இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
