60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி : 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை உறுதிசெய்ய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க குழு அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தில், பீகார் மாநில ஜாமின் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை தொடங்காமல் இருப்பதை கண்டு உச்சநீதிமன்றம் அதிர்ச்சி அடைந்தது. இதனால், குற்றவாளிகள் ஜாமின் பெற முடியாமல் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதே போன்று 650 வழக்குகள் உள்ளதாக, உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கரோல் அமர்வு சுட்டிக்காட்டி மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு, 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக நாடு முழுவதும் வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்று தெரிவித்தது. பின்னர் வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க நீதிமன்றத்துக்கு உதவும் வகையில் கருத்துக்களை வழங்க முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து, மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆகியோரை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது கருத்துக்களை வழங்க வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஒத்தி வைத்தனர்.