கூப்பிட்டதும் ஆதரவுக்கரம் நீட்டிய சுயேச்சைகள் மூன்று பேரும் முடங்கிக் கிடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘வெயிலூர் மாவட்டத்துல மூணு நாளைக்கு முன்னாடி சர்ச்சைக்கு பேர் போன கவர்னரு வந்தாரு.. வந்தவருக்கு வழக்கம் போல காக்கிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சாங்களாம்.. இந்த பாதுகாப்புக்காக காக்கிகள் ஆங்காங்கே சிக்னலில் நிறுத்தப்பட்டிருந்தாங்களாம்.. அப்படி நிறுத்தப்படும்போது ஒவ்வொரு சிக்னல்ல இருந்த காக்கிகளும் கையில வாக்கி... டாக்கி... வெச்சிக்கிட்டு சிக்னலை முன்கூட்டிேய கிளியர் செஞ்சிருக்காங்க.. அதுபோல இல்லாட்டியும், காக்கிகள் ஒவ்வொரு சிக்னல்லயும், வாக்கி.. டாக்கி.. வெச்சிக்கிட்டு ஆம்புலன்ஸ்கள் வரும்போது ஒரு சிக்னல்ல இருந்து இன்னொரு சிக்னல் போறதுக்குள்ள ரூட்டை கிளியர் செஞ்சாங்கன்னா பல உயிர்களை காப்பாத்த முடியும்னு சிக்னல்ல நின்னுக்கிட்டு இருந்த பப்ளிக் பேசிக்கிட்டாங்க.. சம்பந்தப்பட்ட காக்கிகள் ஜனங்க மேல அக்கறை செலுத்தி இதை செய்யணும்னு பப்ளிக்கோட எதிர்பார்ப்பா இருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சொந்த காசை போட்டு எவ்வளவு நாள்தான் வேலை செய்வது என நடிகரின் புதிய கட்சி ஆரம்பகால ரசிகர் மன்றத்தினர் ஒதுங்கியே நிற்கிறாங்களாமே எதுக்காம்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘புதிய கட்சி தொடங்கிய நடிகர், 2வது மாநில மாநாட்டை தூங்கா நகரில் ஆகஸ்ட் 25ல் நடத்தப்போறதா அறிவிச்சிருக்காரு.. அரசியலில் யாரும் பண்ணாததை பண்ண வேண்டும் என நினைத்து ஏகப்பட்ட பில்டப் கொடுப்பதால் சொந்தக்கட்சியினரே நொந்துபோய் இருக்கிறாங்களாம்.. மாநாடு விவரம் குறித்து முந்தைய நாள்தான் தகவல் சொல்லப்பட்டதாம்.. அதிகாலை 4 மணிக்கு முகூர்த்த கால் ஊன்றியதில் ஏகப்பட்ட குழப்பமாம்.. இதை பின்னணியாக வைத்து, தங்கமான மாவட்ட தலைவர் தன் பங்குக்கு வசூலில் இறங்கியது மட்டுமின்றி, வாரிசையும் உள்ளே இறக்கி விட்டதால் கட்சியினர் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறாங்களாம்.. இது ஒருபுறமிருக்க, எந்தெந்த வழிகளில் கூட்டம் சேர்க்கலாம் என்பதே இப்போதைக்கு பெருங்கவலையாக இருக்கிறதாம்.. மாநாட்டுக்கு பணத்தை வெளியே எடுக்க நிர்வாகிகளிடம் பெரும் தயக்கம் வேற இருக்கிறதாம்.. இரண்டாம் மாநாட்டிலேயே இந்த நிலைமை என்றால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் வரை எப்படி இழுத்துக் கொண்டு போவதென அச்சத்தில் கட்சியினர் உறைந்திருக்காங்களாம்.. சொந்த காசை போட்டு வேலை பார்க்கும் ஆரம்ப கால ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள், கொஞ்சம் ஒதுங்கியே இருக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூப்பிட்டதும் ஆதரவுக்கரம் நீட்டிய சுயேச்சைகள் மூன்று பேரும் முடங்கிக் கிடக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் தேஜ கூட்டணி ஆட்சி ஆட்டம் காணாமல் நிலைத்து நிற்க மூன்று சுயேச்சைகள்தான் காரணமாம்.. பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்காததால் தாமரை அழைத்தவுடன் மிகுந்த எதிர்பார்ப்பில் ஓடோடி சென்றார்களாம்.. லகரம், அமைச்சரவையில் இடம், வாரியம் ஆகியவற்றில் ஏதாவது உடனே கொடுப்பதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டதாம்.. இதனால் நான்கு வருஷமாக பல அதிருப்திகளுக்கு மத்தியிலும் தாமரையுடனே பயணித்தார்களாம்.. ஆனால் இதுவரையில் எந்த கோரிக்கையும் நிறைவேற வில்லையாம்.. இதை மனதில் வைத்து எம்பி தேர்தலுக்கு பின் தாமரையிலே அதிருப்தி கோஷ்டி உருவெடுக்க அவர்களுடன் கைகோர்த்து அரசியல் கூத்துகளை அடுத்தடுத்து அரங்கேற்றினார்களாம்.. கடைசியாக அதிருப்தி கோஷ்டிக்கு அமைச்சரவையில் அங்கம் கிடைக்க, மூன்று சுயேச்சைகளும் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்களாம்.. ஆட்சியும் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி விட்டதாலும், தாமரையில் பிளவு உருவாக இவர்கள்தான் காரணம் என்ற விரக்தியாலும் அமைச்சர் பதவியேற்பு விழாவுக்குகூட மூவரும் வரவேக் கூடாது என்பது தாமரை கட்சியின் மேலிட பொறுப்பாளரின் கண்டிப்பான உத்தரவாம்.. இதனால் மூவரும் தாமரை மீதான முணுமுணுப்பில் முடங்கிப் போய் கிடக்கிறார்களாம்.. கூப்பிட்டதும் ஆதரவுக்கரம் நீட்டியவர்களை அம்போன்னு நடுத்தெருவில் தாமரை கைவிட்டுள்ளதாக புதுச்சேரி முழுக்க பேச்சு ஓடுது..’’ என்றார் விக்கியானந்தா.
‘அக்கா, தம்பி இடையே உருவாகி இருக்கும் கோஷ்டி மோதலால் மான்செஸ்டர் மலராத கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி இலைக்கட்சியினரும் கிலியில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாநகரில் மலராத கட்சி தலைவர்களுக்கு இடையே மோதல் நாளுக்கு நாள் அதிகமாகிக்கிட்டே வருகிறதாம்.. கட்சியோட மாஜி தலைவர் தனது சொந்த ஊரில் இனி ஒரு போதும் பருப்பு வேகாதுன்னு உறுதியா நம்புகிறதால அங்கிருந்து மூட்டை முடுச்சுகளோடு மான்செஸ்டர் மாநகர்க்கு இடம் பெயர்ந்துவிட்டாராம்.. மாஜியின் வருகை கட்சியோட தேசிய தலைவிக்கு சுத்தமாக பிடிக்கலையாம்.. அதோடு இல்லாம கட்சிக்குள் தனக்கு என ஒரு கோஷ்டியை உருவாக்கிட்டு எதிர் அரசியல் செய்து வருவதால் அக்கா, தம்பிக்கும் இடையே யார் பெரியவங்க என்பதில் நீண்ட நாளா பனிப்போர் இருந்துட்டு இருக்கு.. அதோடு இல்லாம தேசிய தலைவிக்கு எரிச்சலூட்டும் மாதிரி தேவையில்லாத உள்ளடி வேலைகளையும் மாஜி சத்தமில்லாம செய்ய தொடங்கி இருக்கிறாராம்.. அடுத்தாண்டு நடக்கிற எலக்சனில் மீண்டும் களம் இறங்க வேண்டும்னு தேசிய தலைவி காய் நகர்த்திட்டு வருகிறாராம்.. அதற்கு வசதியாக தொகுதியில அடிக்கடி ரவுண்ட்ஸ் வருவதும், நலத்திட்ட உதவி, தொண்டர்கள் சந்திப்புன்னு ஏதாவது செய்துகிட்டு வருகிறாராம்.. ஆனா மாஜி தரப்போ இவருக்கு மீண்டும் சீட் கொடுக்க கூடாது என கட்சியோட மேல்மட்டத்துல முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம்.. அதை மீறி சீட் வாங்கிட்டா தக்க பாடம் புகட்டனும்னு திட்டம் தீட்டி இருக்கிறாராம்.. இதனால இருவருக்கான முட்டல், நாளுக்கு நாள் ரொம்பவும் பெரிதாகிட்டே வருதாம்.. இவர்களின் மோதல் கீழ் மட்டத்துல இருக்கிற தொண்டர்கள் வரை எதிரொலிக்க தொடங்கி இருக்காம்.. இந்த கோஷ்டி பூசல் மலராத கட்சியோட நிர்வாகிகளை மட்டுமல்லாம கூட்டணியில் இருக்கிற இலைக்கட்சியினருக்கும் கிலியை ஏற்படுத்தியுள்ளதாம்.. இவர்களை நம்பி எப்படி தேர்தலில் களம் இறங்குவதுன்னு தெரியாம புலம்பி வருகிறார்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.