சூப்பர் 4 போட்டியில் இன்று சாத்தியம் தேடும் பாகிஸ்தான் சாதிக்கும் முனைப்பில் இந்தியா: துபாயில் இரவு 8 மணிக்கு மோதல்
துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிய நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன. சூப்பர் 4 சுற்றில் இந்தியா மோதும் முதல் போட்டி இன்று, துபாயில் பாகிஸ்தானுடன் நடைபெற உள்ளது. கடந்த 14ம் தேதி பாகிஸ்தானுடன் நடந்த லீக் சுற்றுப் போட்டியில் இந்திய அணி, 25 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து, துபாயில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் சூப்பர் 4 சுற்றில் தனது முதல் போட்டியாக பாகிஸ்தானுடன் இந்தியா மோதவுள்ளது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு, சுழல் பந்து வீச்சாளர்கள் சாதகமான அம்சமாக திகழ்கின்றனர். முதல் போட்டியின்போது இரு அணிகளின் கேப்டன்கள் மற்றும் வீரர்கள் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொள்வதை தவிர்த்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளானது. இன்று நடக்கும் போட்டியின் போதும், அது தொடரும் என கூறப்படுகிறது. ஓமனுடன் நடந்த லீக் போட்டியில் அந்த அணியின் ஆமிர் கலிம், ஹமத் மிர்ஸா, இந்திய பந்து வீச்சாளர்கள் ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் பந்துகளை துவம்சம் செய்தது, இந்திய ரசிகர்களை கவலையடையச் செய்தது.
இன்றைய போட்டியில் அந்த குறை சரி செய்யப்படலாம். துபாய் மைதானம், சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால், குல்தீப் யாதவ், இந்தியாவுக்காக முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி பேட்டர்களில், சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா போன்றோர் இன்னும் பேட்டிங்கில் அதிரடி காட்டாமல் ஏமாற்றி வருகின்றனர். இருப்பினும், அணியின் முதல் 4 வீரர்கள், கணிசமான ரன்களை குவித்து அணியை காப்பாற்றி வருவது வாடிக்கையாகி உள்ளது.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை, கணிக்க முடியாத ஒன்றாக திகழ்கிறது. தற்போதைய அணியில் போதிய திறனற்ற வீரர்கள் இருப்பது பெருங்குறையாக பார்க்கப்படுகிறது. அந்த அணியின் பேட்டிங் படுமோசமாக இருப்பது வெளிப்படை. குறிப்பாக, சுழல் பந்துகளை எதிர்கொள்ள பாக். வீரர்கள் அதிகமாகவே சிரமப்படுகின்றனர்.
அந்த அணியின் துவக்க வீரர் சயீம் அயூப், கடந்த 2 போட்டிகளில் பேக் டு பேக் பூஜ்யம் எடுத்து பேசுபொருளாகி உள்ளார். பாக். அணியின் சாகிப்ஸதா ஃபர்கான், ஹசன் நவாஸ் ஆகிய இருவர் மட்டுமே பேட்டிங்கில் ஓரளவு திறனை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடக்கும் போட்டியில் இரு அணிகளும் தங்கள் பலத்தை நிரூபிக்க முனைப்பு காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.