கோடை விழா நிறைவு நாளில் குளுகுளு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
மலர் கண்காட்சியை காண தினமும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து பல வண்ண மலர்கள், பல்வேறு மலர் உருவங்களை கண்டு ரசித்ததுடன் செல்பி, புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் கோடை விழாவையொட்டி தினமும் அரசு துறைகள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாய்கள் கண்காட்சி, படகு அலங்கார போட்டி, படகு போட்டி நடைபெற்றன. இதனையும் சுற்றுலாப் பயணிகள் வெகுவாக கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் நேற்றுடன் மலர் கண்காட்சி, கோடை விழா நிறைவடைந்தது. மேலும் பள்ளி கோடை விடுமுறையின் கடைசி நாளான நேற்று கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது. இதனால் பிரையண்ட் பூங்கா, நட்சத்திர ஏரி, குணா குகை, கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பைன் பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொடைக்கானலில் இதமான வெயில், குளிர் என்ற சீதோஷ்ண நிலை நிலவியதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.