சூலூர் அருகே அடுத்தடுத்து கார்கள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம்
சூலூர் : சூலூர் அருகே தொடர்ந்து 3 கார்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். கோவை மாவட்டம் சூலூர் ஆறுபடை முருகன் கோயில் அருகே உடுமலைப்பேட்டையை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது காரை ஒரு பாதையில் இருந்து மற்றொரு பாதைக்கு வளைவில் திருப்ப முயன்றார்.
அப்போது கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி வந்த பார்ச்சுனர் வாகனம் ஒன்று அதிவேகமாக இந்த கார் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் எதிர் திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது.
இந்த சம்பவம் நடந்தவுடன் அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காரில் இருந்தவர்களை காப்பாற்றி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஒரு காரில் வந்த காரைக்குடியை சேர்ந்த ஓட்டுனர் முகமது ஆசிப் (26), லட்சுமணன், அவரது மனைவி தெய்வானை ஆகியோர் காயமடைந்தனர். மேலும் பழநியில் இருந்து வந்த காரில் இருந்த ராகுல், (18), ரமேஷ், கவிதா, ரேணுகா, தண்டபாணி, நந்தினி, கலாவதி உள்ளிட்டோர் காயமடைந்தனர்.
இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து காரணமாக கோவை திருச்சி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய வாகனங்களை அப்புறப்படுத்தி தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை செய்யாத ஏர்பேக்
சூலூரில் நேற்று 3 கார்கள் தொடர்ந்து அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விலை உயர்ந்த சொகுசு காரான பார்ச்சுனர் காரில் இருந்த ஏர்பேக் விபத்திற்கு பின்னர் திறக்கவில்லை.
இது செயல்படாததால் தான் அந்த வாகனத்தில் வந்த இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இந்நிலையில் பயங்கரமாக அடுத்தடுத்து மோதிய சம்பவத்தில், காரில் ஏர்பேக் ஓபன் ஆகாதது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.