மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் தற்கொலை: காஞ்சியை சேர்ந்தவர்
நாகை: காஞ்சிபுரம் மாவட்டம் கோட்டூரை சேர்ந்த வேல்முருகன் மகன் நிஷாந்த்(22). நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். செமஸ்டர் தேர்வில் ஒரு பாடத்தில் நிஷாந்த் தோல்வியடைந்தார். மீண்டும் அந்த தேர்வில் வெற்றி பெற்றால் தான் 3ம் ஆண்டு செல்ல முடியும் என்ற நிலையில் மன விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு படிப்பதற்காக அங்குள்ள தனி அறைக்கு சென்றார். நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவர் அந்த அறையை விட்டு வெளியே வரவில்லை. சக மாணவர்கள் அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர்.
ஆனால் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த மாணவர்கள், விடுதி அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அவர் மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கினார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து ஏற்கனவே நிஷாந்த் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.