ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்; தற்கொலை எண்ணங்களை தூண்டுகிறதா சாட்ஜிபிடி?: 80 கோடி பயனர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து
நியூயார்க்: பிரபல செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடி, தற்கொலை எண்ணம் கொண்டவர்களுக்கு ஆபத்தான ஆலோசனைகளை வழங்குவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலிகளிடம் (ஆப்ஸ்) மனநல ஆலோசனை பெறுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆனால், இத்தகைய செயலிகள் சில சமயங்களில் ஆபத்தான மற்றும் தவறான ஆலோசனைகளை வழங்குவதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
சில செயலிகள் தற்கொலை எண்ணம் குறித்து பேசும்போது, அதைத் தடுப்பதற்குப் பதிலாக தற்கொலைக்குத் தூண்டும் வகையிலான பதில்களை அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட ஒரு வழக்கில், செயற்கை நுண்ணறிவு செயலி ஒன்று தற்கொலைக்கு தூண்டியதால் ஒரு பதின்வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இச்செயலிகளிடம் பகிரப்படும் தகவல்களுக்கு நோயாளி-மருத்துவர் போன்ற சட்டப் பாதுகாப்பு இல்லாததால், அந்தரங்க தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய செயலிகள் உண்மையான மனித உணர்வுகளையோ, புரிதலையோ கொண்டிருக்கவில்லை என்பதால், அவற்றை மனநல ஆலோசனைக்கு நம்புவது பேராபத்தில் முடியக்கூடும் என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர்.
இந்த நிலையில், ‘சாட்ஜிபிடி’ செயலியை உருவாக்கியுள்ள ‘ஓபன்ஏஐ’ நிறுவனம் இதுகுறித்த சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாரந்தோறும் சாட்ஜிபிடியை பயன்படுத்தும் 80 கோடி பயனர்களில், சுமார் 12 லட்சம் பேர் தற்கொலை எண்ணங்கள் தொடர்பாக உரையாடுவது தெரியவந்துள்ளது. இவர்களில் 9 சதவீதத்தினருக்கு, தற்கொலை தடுப்பு உதவி எண்களையோ அல்லது நிபுணர்களின் ஆலோசனைகளையோ சாட்ஜிபிடி வழங்கத் தவறியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஓபன்ஏஐ நிறுவனம் ஒரு விளக்கத்தை அளித்துள்ளது. அதில், ‘உணர்ச்சிப்பூர்வமான உரையாடல்களுக்கு சரியான மற்றும் நிலையான பதில்களை வழங்கும் வகையில், 170க்கும் மேற்பட்ட மனநல நிபுணர்களுடன் இணைந்து எங்கள் செயலியை மேம்படுத்தி வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.