கரும்புக்கு உரிய விலை கோரி போராட்டம்; அமைச்சர் கார் மீது செருப்பு தண்ணீர் பாட்டில் வீச்சு: கர்நாடகாவில் விவசாயிகள் ஆவேசம்
பெலகாவி: கர்நாடகாவில் கரும்புக்கு உரிய விலை வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்து அமைச்சர் கார் மீது செருப்புகளை வீசி எறிந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கரும்புக்கு நியாயமான மற்றும் ஆதாய விலை (எஃப்.ஆர்.பி) நிர்ணயிக்கக் கோரி பெலகாவியில் விவசாயிகள் காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தற்போது வழங்கப்படும் விலையில் செய்யப்படும் பிடித்தங்களால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எதிர்க்கட்சியான பாஜக, விவசாயிகளின் போராட்டக்களத்திற்கே நேரடியாக சென்று தனது ஆதரவைத் தெரிவித்ததால், ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த முதல்வர் சித்தராமையா, இதுகுறித்து விவாதிக்க பிரதமரை சந்திக்க அவசரமாக நேரம் கேட்டு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், மாநில ஜவுளி மற்றும் கரும்பு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல், நேற்று போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
அப்போது விவசாயிகளிடம் பேசிய அமைச்சர், ‘முதல்வர் சித்தராமையா, நாளை (இன்று) அனைத்து சர்க்கரை ஆலை உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தி இதுகுறித்து இறுதி முடிவை எடுப்பார்’ என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த பதிலால் விவசாயிகளுக்கு உடனடி தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியும், ஆத்திரமும் அடைந்த விவசாயிகளில் சிலர், அமைச்சர் அங்கிருந்து தனது காரில் புறப்பட்டபோது, அவரது காரை முற்றுகையிட்டு செருப்புகளையும், தண்ணீர் பாட்டில்களையும் வீசி எறிந்து தங்களது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.