சர்க்கரை நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை: பொது சுகாதாரத்துறை இயக்குநர் தகவல்
சென்னை: சென்னை எம்.வி. மருத்துவ மனை சார்பில் பேராசிரியர் எம். விஸ்வநாதன் நூற்றாண்டு விருது மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், டாக்டர் பன்ஷி சபூ, டாக்டர் விஜய் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர். பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் பேசியதாவது: சர்க்கரை நோயால் குழந்தைகள் பாதிக்கப்படுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் காப்பீட்டு திட்டத் தின் வாயிலாக, தனியார் மருத்துவ மனைகளிலும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில், சர்க்கரை நோய்க்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலமும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலமும், மருத்துவ வசதிகள் கிடைப்பதில் உள்ள இடைவெளியைக் குறைத்து, அனைத்து தரப்பு மக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.