சுகன்யா சம்ருத்தி யோஜனா
பெண் குழந்தையின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டங்களில் ஒன்று “ சுகன்யா சம்ருத்தி யோஜனா”. 10 வயதிற்குள் உள்ள பெண் குழந்தைக்காக தொடங்கக்கூடிய இந்த வங்கி சேமிப்புத் திட்டம், நீண்டகால முதலீட்டில் அதிக வட்டி தரும் வழியாக பரிந்துரைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். வட்டி விகிதம் 7.6 முதல் 8.2 சதவீதம் வரை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. FD, RD போன்ற பாரம்பரிய முதலீட்டுகளைவிட இந்த வட்டியளவு அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த கணக்கில் செலுத்தும் தொகைக்கும், கிடைக்கும் வட்டிக்கும், திட்டத்தின் முடிவில் பெறும் தொகைக்கும் வரி விலக்கு உண்டு.
இது ‘‘EEE” வகையைச் சேர்ந்த முதலீடாகப் பரிந்துரைக்கப்படுகிறது.குழந்தையின் பிறந்த நாளிலிருந்து 21 ஆண்டுகள் வரை இந்த திட்டம் செல்லுபடியாகும். ஆனால் 15 ஆண்டுகள் வரை மட்டுமே பணம் செலுத்த வேண்டும். 18வது வயதில் குழந்தையின் கல்விக்கோ அல்லது திருமணத்துக்கோ தேவையான விதத்தில், கிடைத்திருக்கும் தொகையின் 50% வரை முன்பாக எடுப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. மீதமுள்ள தொகையை முதிர்ச்சி வந்ததும் முழுமையாக பெற முடியும்.
இந்தக் கணக்கை தொடங்க, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் அடையாள ஆவணங்கள் மற்றும் முகவரிச் சான்றுகள் தேவைப்படும். அஞ்சல் நிலையங்கள் மற்றும் பல்வேறு அரசு மற்றும் தனியார் வங்கிகள் இந்த சேவையை வழங்கி வருகின்றன. குறிப்பாக சில வங்கி ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செயலிகளிலும் கூட இந்தத் திட்டத்துக்கான பணம் செலுத்தி சேமிக்கலாம். ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். ஆனால் ஒரே குடும்பத்தில் இரு பெண் குழந்தைகள் இருந்தால், இரண்டு கணக்குகள் தொடங்கலாம். இரட்டைக் குழந்தைகள் பிறந்தால், மூன்றாவது கணக்கும் சிறப்பு முறையில் தொடங்க அனுமதிக்கப்படும்.இது குறித்த முழுமையான விவரங்கள் பெற அருகாமையில் இருக்கும் அஞ்சல் நிலையங்கள், அங்கன்வாடிகளுக்குச் சென்று தகவல்கள் பெறலாம்.