சுத்திகரிப்பு தண்ணீர் செல்லும் கால்வாய் அடைப்பு; கிருஷ்ணன்கோவிலில் திடீர் வெள்ள பெருக்கு: வீடுகள், கடைகளில் தண்ணீர் புகுந்தது
நாகர்கோவில்: கிருஷ்ணன்கோவில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் நீர்வழிப் பாதைகள் அடைப்பால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதன் காரணமாக வீடுகள் கடைகளில் தண்ணீர் புகுந்தது. நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைந்திருக்கிறது. முக்கடல் அணை மற்றும் புத்தன் அணையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் இங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது புத்தன் அணையில் இருந்து குடிநீர் விநியோகம் நடந்து வருகிறது. சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின் வெளியேறும் கழிவு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தின் பின்புறம் உள்ள கால்வாய் வழியாக புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சுப்பையார்குளத்தில் வந்து சேரும். இதற்காக சமீபத்தில் மாநகராட்சி மேயர் உத்தரவின் பேரில் புதிய குழாய்களும் பதிக்கப்பட்டு கால்வாய் அமைக்கப்பட்டது.
இந்தநிலையில் இந்த கால்வாய் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் குளத்துக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. தண்ணீர் வரக்கூடிய கால்வாய் முழுவதும் நிரம்பி இன்று காலையில் தண்ணீர் செல்ல முடியாமல் வடிகால் முழுவதும் நிரம்பி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது. கிருஷ்ணன் கோவில் போலீஸ் ஸ்டேஷன் ரோடு முழுவதும் தண்ணீர் ஆறாக ஓடியது. மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுப்பது போல் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அது மட்டுமில்லாமல் கிருஷ்ணன் கோவில் சந்திப்பில் உள்ள பெட்டிக்கடை, பாலத்து அம்மன் கோயில் மற்றும் அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் தண்ணீர் புகுந்தது. இதை போல் இலந்தையடி விநாயகர் கோயில் பகுதியில் உள்ள சில வீடுகளின் படிக்கட்டுகளும் தண்ணீரில் மூழ்கின. வாகனங்கள் தண்ணீரில் திணறியே சென்றன.
திடீரென புதிய ஆறு உருவாகியது போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காட்சியை காண பொதுமக்களும் திரண்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, கவுன்சிலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு வந்தனர். தண்ணீர் வெளியேறுவதை தடுக்க தேவையான நடவடிக்கை உடனடியாக தொடங்கப்பட்டது. நீர் உறிஞ்சி வாகனம் வரவழைக்கப்பட்டு முதலில் கால்வாய்களில் தேங்கியிருந்த தண்ணீர் உறிஞ்சபட்டது. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.