திடீர் சமரசத்தால் திருப்பம் நடிகை லட்சுமி மேனன் மீதான ஆள் கடத்தல் வழக்கு தள்ளுபடி: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கொச்சி: பிரபல நடிகை லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் மீதான ஆள் கடத்தல் வழக்கை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் அலியார்ஷா சலீம் என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை லட்சுமி மேனன் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், கொச்சியில் உள்ள மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, லட்சுமி மேனனும் அவரது நண்பர்களும் தன்னை பின்தொடர்ந்து வந்து, காரில் கட்டாயப்படுத்தி ஏற்றி தாக்கியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் லட்சுமி மேனன் கடந்த அக்டோபர் மாதம் முன்ஜாமீன் பெற்றிருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், புகார்தாரர் தன்னையும் தனது தோழியையும் அவதூறாகப் பேசியதாலேயே பிரச்னை ஏற்பட்டதாகவும் லட்சுமி மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.எஸ். தியாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பினரும் நீதிமன்றத்திற்கு வெளியே பேசி சமரசமாக செல்வதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து புகார்தாரரான அலியார்ஷா சலீம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘தவறான புரிதல் காரணமாகவே இந்த புகார் அளிக்கப்பட்டது; தங்களுக்குள் இருந்த பிரச்னையை பேசித் தீர்த்துக் கொண்டதால் வழக்கை முடித்து வைப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, நடிகை லட்சுமி மேனன் தாக்கல் செய்த மனுவை ஏற்று, அவருக்கு எதிரான ஆள் கடத்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.