துணிச்சல் உள்ளவர்களுக்கே வெற்றி சாத்தியமாகும்!
எதிர்காலத்தைப் பற்றிய குழப்பம் இருக்கலாம். அது உங்களை அச்சமூட்டுகிறது என்று எனக்குத்தெரியும். ஆனால் உங்களுக்குத்துணிவு தேவை.அந்த துணிவு என்பது அச்சமின்மை இல்லை. அச்சத்தை மீறி முன்னேறிச் செல்கின்ற குணம். அப்படி முன்னேறிச் செல்பவர்களுக்கு வாழ்க்கை என்பது ஒரு அற்புதமான சாகசம். அப்போதுதான் புதிய,புதிய வாய்ப்புகளும் உங்களைத் தேடி வரும்.
மரண தண்டனை வழங்கப்பட்ட ஒருவனுக்கு அவனது கடைசி விருப்பத்திற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பு அந்த நாட்டு அரசர் கைதியிடம் அவனுக்கு இரண்டு வாய்ப்புகள் இருப்பதாகக் கூறினார்.ஒன்று தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் அல்லது இருளும்,சகதியும் நிரம்பிய காட்டைத் தாண்டி இருக்கும் குகை வழியாக வெளியே செல்லலாம் என்றார்.
அவன் குகையைப் பார்த்துவிட்டு, இந்த குகை எங்கே செல்கிறது என்று கேட்டான். அதற்கு அரசர் யாருக்குமே தெரியாது என்றார். அவன் மீண்டும்,மீண்டும் அந்தப் பாதையைப் பார்த்தான். மோசமான சகதிகளும்,இருள் நிரம்பிய காடும் அவனுக்கு மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியது. கடைசியாக அவன் நீங்கள் தண்டனை நிறைவேற்றலாம் என்றான். அவர்களும் நிறைவேற்றினார்கள். சிறிது காலம் கழித்து சிறைக்கு வந்த ஒரு இளம் வீரர் அந்த குகைப் பகுதியை ஆராயலாமா என்று அரசரிடம் கேட்டார். ஆச்சரியத்துடன் பார்த்த அரசர் நன்றாக யோசித்துக்கொள். நானாக இருந்தால் இதை செய்யமாட்டேன் என்றார்.
அந்தக் குகையை நோக்கிச் சென்ற இளம் வீரர் சதுப்பு நிலத்தைத் தவழ்ந்தபடித் தாண்டிச் சென்று,இருள் நிறைந்த காட்டுப் பகுதியையும் மிகவும் கஷ்டப்பட்டு கடந்து குகையை அடைந்தார். ஒரு வழியாக குகையைக் கடந்த பின்,வெளியே செல்ல வழி கிடைத்தது. துணிவோடு வெளியே சென்றார். வெற்றி பெற்ற இளம் வீரரை அரசர் பாராட்டினார். ஆனால், கைதியோ முயற்சி செய்யாமல் மரணதண்டனை அடைந்தார். இந்த கதையில் வரும் கைதியைப் போன்று தான் பலரும் தெரியாத சொர்க்கத்தை விட தெரிந்த நரகமே பரவாயில்லை என்று எண்ணுகிறார்கள். அது மட்டுமல்ல எல்லோருமே வெற்றி அடைய ஆசைப்படுகிறோம். ஆனால், அதற்கு முன் வெற்றியை அடைய நாம் நம்மைத் தயார்படுத்திக் கொண்டோமா என்றால்,கிடையாது. ஆசைபட்டால் மட்டும் வெற்றி நம்மை வந்தடையாது. துணிவோடு முன்னேறிச் செல்பவர்களுக்கே வெற்றி சாத்தியமாகும்.
இருளையும்,குகையையும் தாண்டிச் சென்று வெற்றியின் வழியைக் கண்டுபிடித்த இளம் வீரரை போன்ற துணிச்சல் உள்ளவர்களுக்கே வெற்றி சாத்தியமாகும். அந்த இளம் வீரரைப் போன்று இளம் வயதிலேயே துணிவோடு முன்னேறி வெற்றி பெற்ற ஒரு இளம் விளையாட்டு வீரரைப் பற்றி நீங்கள் கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக க்களமிறங்கிய 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தமக்கு கிடைத்த வாய்ப்பைச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட அவர் 7 போட்டிகளில் 252 ரன்கள் அடித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 206 ஆகும். தாம் விளையாடிய முதல் போட்டியிலேயே சர்துல் தாக்கூர் போன்ற சர்வதேச வீரர்களின் பந்துவீச்சைச் சுக்கு நூறாக உடைத்து 20 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் வைபவ் சூர்யவன்சி இந்திய அணியில் அடுத்த ஸ்டார் வீரராக உருவெடுப்பார் என்று பலரும் கருதினர்.
இந்த தருணத்தில் தான் வைபவ் சூரியவன்சி, இங்கிலாந்துக்கு எதிரான அண்டர் 19 கிரிக்கெட் போட்டிக்கு ஆயுஷ் மாத்ரே உடன் தேர்வாகி விளையாடி உள்ளார்.வைபவ் சூரியவன்சி, பங்கேற்ற இந்திய அண்டர் 19 அணிக்கான பயிற்சி ஆட்டம் பெங்களூரில் நடைபெற்றது.இதில் பங்கேற்ற வைபவ் சூரியவன்சி 90 பந்துகளில் 190 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். இதில் அவர் அடித்த ஒவ்வொரு சிக்ஸரும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. எனினும் இது பயிற்சி ஆட்டம் என்பதால் இது தொடர்பான ஸ்கோர் கார்டு எதுவும் வெளியாகவில்லை.
வைபவ் சூரியவன்சி தமக்கு 13 வயது இருக்கும்போதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அண்டர் 19 கிரிக்கெட் போட்டியில் 58 பந்துகளில் சதம் அடித்து தனது திறமையை நிரூபித்தார். அதிலும் அவர் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தால், சச்சின் டெண்டுல்கரை போல் மிக விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனது ஐபிஎல் சீசன் குறித்து கருத்துத் தெரிவித்திருந்த வைபவ் சூரியவன்சி அடுத்த சீசனில் இதைவிட இரண்டு மடங்கு அபாரமாக விளையாடுவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
14 வயது வீரரான வைபவ் சூரியவன்சியை ராஜஸ்தான் அணி ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இவ்வளவு இளம் வயது வீரரை இவ்வளவு தொகை கொடுத்து ஏன் எடுத்தீர்கள் என்று பலரும் கேள்வி கேட்டனர். மேலும் சர்வதேச வீரர்களின் பந்துவீச்சை அவர் தாக்குப்பிடிக்க மாட்டார் என்று பலரும் ஏளனமாகப் பேசிய நிலையில் தன்னுடைய பேட்டால் பதில் அளித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
வைபவ் சூரியவன்சி மார்ச் 27, 2011இல் இந்தியாவின் பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள தாஜ்பூரில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார்.துவக்க காலங்களில் தனது தந்தையிடம் பயிற்சி பெற்றார். பீகாரைச் சேர்ந்த இடது கை பேட்ஸ்மேன் 2024 ஜனவரியில் முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார். ரஞ்சி டிராபியில் இடம்பெற்ற இரண்டாவது இளைய வீரர் ஆனார். அந்தப் போட்டியில் அவர் சிறப்பான தொடக்கத்தைப் பெறவில்லை. ஆனால் அந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆஸ்திரேலியா யு19 அணிக்கு எதிரான சதம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த யு19 ஆசியக் கோப்பையில் இரண்டு அரை சதங்கள் மூலம் இளைஞர் கிரிக்கெட்டில் நம்பிக்கைக்குரியவராக உருவானார். நாக்பூரில் நடந்த சோதனை போட்டிகளின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்தையும் அவர் கவர்ந்தார். இறுதியில் அவர்கள் அவரை 1.1 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தனர். வைபவ் சூரியவன்சியின் அச்சமற்ற அணுகுமுறை, அவருடைய பேட் வேகம், பந்தின் லென்த்தை முன்கூட்டியே கணிப்பது மற்றும் பந்தை அடிப்பதற்கு உருவாக்கும் ஆற்றல் என இந்த நான்கு விஷயங்களும் அவருடைய அற்புதமான இன்னிங்ஸுக்கு பின்னால் இருக்கும் செய்முறையாகும் என பாராட்டி இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
எனக்கு எந்த பவுலரையும் பார்த்து பயம் கிடையாது என்கிறார் 14 வயது சூரியவன்சி.இத்தகைய துணிச்சல்தான் சூரியவன்சி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு அடித்தளமாக அமைந்தது என்பதில் ஐயமில்லை.கிரிக்கெட் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கக்கூடிய இன்றைய இளைஞர்களுக்கு வைபவ் சூரியவன்சியின் சமீபத்திய சாதனை ஊக்கமளிக்கும் உன்னத பாடமாகும்.
தாகம் உள்ளவர்தான் இவ்வுலகில் தண்ணீரைத் தேடுகின்றனர். தாகம் கொண்டவர்களைத்தான் தண்ணீரும் தேடிக் கொண்டிருக்கிறது என்கிறார் பாரசீக கவிஞர் ஜலாலுதீன் ரூமி. எனவே வைபவ் போன்று வெற்றி பெற வேண்டும் என்ற தாகத்தில் உள்ளவர்களைத் தான் வெற்றியும் தேடி வருகிறது.