கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தரமற்ற தென்னங்கன்றுகள் விற்பனை
*பரபரப்பு குற்றச்சாட்டு
போச்சம்பள்ளி : ஆந்திர மாநிலத்தில் கொள்முதல் செய்யப்படும் தரமற்ற தென்னங்கன்றுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அரசம்பட்டி தென்னை ஆராய்ச்சியாளர் கென்னடி குற்றம்சாட்டி உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி, அரசம்பட்டி, புலியூர், பண்ணந்தூர், இருமத்தூர், மஞ்சமேடு உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட நர்சரிகள் மூலம் ஆண்டு முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமான தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் விவசாயிகள் தரமான விதை தேங்காய்களை தேர்வு செய்து பதியம் போட்டு, தென்னங்கன்றுகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை உயர்ந்து வருவதால், தென்னை நடவு பணி தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், அரசம்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் சிலர் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு தரமற்ற தென்னங்கன்றுகளை கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தென்னை ஆராய்ச்சியாளரும், தேங்காய் உற்பத்தி சங்க தலைவருமான கென்னடி கூறியதாவது: தேங்காய் விலையை பொறுத்தே, தற்போது தென்னங்கன்றுகளின் விலை உயர்ந்துள்ளது.
அரசம்பட்டியில் உற்பத்தி செய்யப்படும் நாட்டு தென்னங்கன்றுகள் ரூ.150க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலிருந்து குறைந்த விலைக்கு தரமற்ற தென்னங்கன்றுகளை சிலர் கொள்முதல் செய்து, வாகனங்கள் மூலம் கிருஷண்கிரி மாவட்டத்தில் ஒரு கன்று ரூ.70க்கு விற்பனை செய்கின்றனர்.
இக்கன்றுகளை நடவு செய்தால், காய்கள் பிடிப்பது கடினம். மேலும், அரசம்பட்டி தென்னைக்கு புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதுபோன்ற தரமற்ற கன்றுகள் விற்பனையால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
மாவட்டத்தில் சாலையோரங்களில் அரசம்பட்டி தென்னங்கன்று எனக்கூறி தரமற்ற கன்றுகள் விற்பனை செய்வதை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து தடுக்க உரிய நடவடிக்கை எடுத்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.