மூலைக்கரைப்பட்டி அருகே கூடுதல் பஸ்கள் இயக்க கோரி மாணவர்கள் திடீர் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு; போலீசார் பேச்சுவார்த்தை
களக்காடு: மூலைக்கரைப்பட்டி அருகே, கூடுதல் பஸ்கள் இயக்க கோரி, மாணவர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் நெல்லை-மூலைக்கரைப்பட்டி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள புதுக்குறிச்சி, ஆனையப்பபுரம், தாமரைசெல்வி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் நெல்லை, மூலைக்கரைப்பட்டியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். தினமும் அவர்கள் பஸ்களில் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர். ஆனால் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் மாணவ-மாணவிகள் பாதிப்படைந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதிக்கு வந்து போய்க் கொண்டிருந்த பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நெல்லை- மூலைக்கரைப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகத்தினருக்கு மனுக்கள் கொடுக்கப்பட்ட நிலையில், மனுக்கள் கொடுத்தவர்கள் மீது போலீசார் மூலம் பொய் வழக்கு போடுவதாகவும் புகார் கூறி வருகின்றனர். இந்நிலையில் மூலைக்கரைப்பட்டி அருகே புதுக்குறிச்சியில் இன்று மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும், நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். மாணவர்களின் போராட்டத்திற்கு கிராம மக்களும் ஆதரவு தெரிவித்து மறியலில் கலந்து கொண்டனர். இந்த திடீர் போராட்டத்தால் மூலைக்கரைப்பட்டி-நெல்லை சாலையில் போக்குவரத்து தடை பட்டது. பஸ்கள், வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றதால் அப்பகுதிதில் பரபரப்பு ஏற்பட்டது.
மூலைக்கரைப்பட்டி போலீசார் அங்கு சென்று போராட்டக்காரர்களை கலைத்து போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் நெல்லை-மூலைக்கரைப்பட்டி சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.