வருங்கால சவால்களை மாணவர்கள் எதிர்கொள்வதற்கு மதிப்பெண்களை விட திறன் வளர்க்கும் கல்வியே அவசியம்: சொல்கிறார்கள் கல்வித்துறை வல்லுநர்கள்
* படைப்பாற்றல் வெற்றிக்கு வழிவகுக்கும்
இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 11ம் தேதி (இன்று) தேசிய கல்வி தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர போராட்ட வீரரும், சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மௌலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்தநாளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி முறையை உருவாக்கவும், அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி கிடைக்கவும், நவீனக் கல்வி முறைக்கும் ஆசாத் வித்திட்டார். இந்தியாவில் உயர்கல்வி நிறுவனமாக, இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் நிறுவுவதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) அமைவதற்கும் பாடுபட்டார். இந்தியாவில் கல்வித்துறைக்கு பெரும் அடித்தளமிட்ட அவரது பணிகளை நினைவு கூறும் வகையில், இவரது பிறந்த நாளை தேசிய கல்வி நாளாகக் கொண்டாட ஒன்றிய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் தேசிய கல்வி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கருத்தரங்குகள், கட்டுரைப் போட்டிகள், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், கல்வி சார்ந்த பணிமனைகள், பேரணிகள் போன்றவைகளை நடத்தி இந்நாளினைக் கல்விக்கான சிறப்பு நாளாகக் கொண்டாடி வருகிறது. இதன் மூலம் எழுத்தறிவு, கல்வியின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் உணர்த்தவேண்டும் என்பதே இந்தநாளின் முக்கிய நோக்கமாகும். இந்தநாளில் இந்தியாவில் கல்வியின் நிலை குறித்த பல்ேவறு தகவல்களையும் ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்தவகையில் தற்போது மதிப்பெண்களை விட, திறன் வளர்க்கும் கல்வியே மிகவும் முக்கியம் என்று தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். இதுகுறித்து கல்வித்துறை வல்லுநர்கள் கூறியதாவது: தற்போது ஆரம்பக் கல்வி படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களில் மூன்றில் இருவர் எதிர்காலத்தில், தற்போது நடைமுறையில் இல்லாத, என்னவென்றே தெரியாத, இனிமேல் புதிதாக உருவாகும் துறைகளில்தான் வேலை பார்க்கப்போகிறார்கள்.
அந்த அளவுக்கு இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல், செயற்கை நுண்ணறிவு போன்றவை துரிதகதியில் வளர்ச்சியடைந்து வருகிறது. இது மாணவர்களை எதிர்காலத்துக்கு எப்படித் தயார்படுத்துவது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதன் காரணமாகப் பல நாடுகள் பள்ளிக் கல்வியில் சீரிய கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கின்றன. இந்தச் சூழலில் இந்தியாவிலும் பள்ளிக் கல்வியில் பலமுக்கிய அம்சங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உருவாகியிருக்கிறது. மதிப்பெண்களை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கல்வியைவிட்டு விலகி, ஆழ்ந்த அறிவையும் திறன்களையும் வளர்க்கக்கூடிய கல்வியைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மாநில அளவில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்ற ஒருவர், பொறியியல் பட்டம் முடித்துவிட்டுப் பணிக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டபோது அதில் மோசமாகத் தோல்வியுற்றார். அதேவேளையில், பொறியியல் படிப்பு படிக்காத-இளங்கலைப் பட்டதாரி ஒருவர் எளிதாகத் தேர்ச்சிபெற்றார். தர்க்கரீதியான சுயசிந்தனையுடன், கற்பனை வளமும் படைப்பாற்றலும் கொண்டிருந்ததுதான் அவரது வெற்றிக்கு வழிவகுத்தது.
மனிதன் மற்ற உயிரினங்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக்கொண்டதற்கு மிக முக்கியக் காரணம், அவனுடைய கற்பனை வளம். கற்பனையில் விளைந்ததைச் சக மனிதர்களிடம் புனைவாகச் சொல்லக்கூடிய வல்லமைதான் மனிதனைத் தனித்தன்மை கொண்ட உயிரினமாக மாற்றியது என்பது உளவியல் உண்மை. இந்த வகையில் கல்வி எனப்படுவது குழந்தைகளின் மூளைக்குள் செய்திகளைத் திணிப்பதல்ல. அது, அவர்களின் அறிவைத் தூண்டும் கருவியாக இருக்க வேண்டும். எனவே மதிப்ெபண்களை மட்டுமே இலக்காக கொள்ளாமல் தனித்திறனையும் வளர்க்கும் கல்வி முறையே எதிர்கால மாணவர் சமுதாயத்திற்கு பெரும்பலன் தரும். இதேபோல் எந்தத் துறையில், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உள்ளன? புதிதாக உருவாக்கப்பட உள்ளது? என்கிற தகவல்கள் திரட்டப்பட்டு ஒருங்கிணைக்கப்படும்போது, அதற்குத் தக்கவாறு மாணவர்கள் அந்தந்தத் துறைகளில் படித்துவிட்டு வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.
எல்லோரும் கண்ணைக் கட்டிக்கொண்டு ஒரே துறையில் படித்து, பின்னர் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுவதை இதன் மூலம் தவிர்க்கலாம். அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாம் இவற்றைச் சரிசெய்துவிட்டால், புதிதாக எழும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஏராளமான மாணவர்களை உருவாக்கலாம். இவ்வாறு கல்வித்துறை வல்லுநர்கள் கூறினர்.
மருத்துவம், பொறியியல் ேபான்று ஆசிரியர் பணி
‘‘உலக அளவில் பள்ளிக் கல்வியில் முன்னணியில் உள்ள நாடு பின்லாந்து. நீண்ட கால உத்தி சார்ந்த திட்டங்களின் காரணமாகக் கடந்த 40 ஆண்டுகளில் இவ்வளர்ச்சியை அந்நாடு அடைந்துள்ளது. அந்நாட்டில் ஆசிரியர் பணியில் சேர்வது கடினமானது. ஒருவர் ஆசிரியராக வேண்டும் என்றால், அந்நாட்டின் எட்டு பல்கலைக்கழகங்களில் ஒன்றில் பட்ட மேற்படிப்பு படித்திருக்க வேண்டும். நுட்பமான பாடத்திட்டம், தீவிரப் பயிற்சி ஆகியவற்றுக்குப் பின்னரே ஆசிரியர் என்று அந்நாட்டில் தகுதி அளிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆசிரியர்கள் குழந்தை உளவியலை ஆழமாக உள்வாங்கியிருக்க வேண்டும். இதுபோன்ற மாற்றங்களை இந்தியாவும் முன்னெடுக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் படிப்புகளைப் போல ஆசிரியர் பயிற்சிப் படிப்பையும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருத வேண்டும்,’’ என்பதும் கல்வியாளர்கள் முன்வைத்துள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று.
தாய்மொழியில் கல்வி அவசியம்
‘‘கல்வி பரவலாக்கப்பட்டு எல்லாருக்கும் சமமாகக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயரும்போது கல்வி இலவசமாகக் கிடைக்கும். அப்போது, மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1லட்சம் வரை பொருளாதாரச் சுமை குறையும். தனியார் பள்ளிகளின் பிடி தளரும். மாநிலம் முழுவதும் ஒரே பாடத்திட்டம் என்பதைவிட, பொதுவான வழிகாட்டுதலோடு, அந்தந்தப் பகுதிகளுக்குத் தக்கவாறு பள்ளிக்கூடங்களே வடிவமைத்துக்கொள்வது சிறந்தது. மாணவர்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தத் தாய்மொழிக் கல்வியே சிறந்தது என 2016 யுனெஸ்கோ ஆய்வறிக்கை தெளிவுபடுத்துகிறது. அதை முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்வடிவம் தர வேண்டும். கற்றல் என்பது தனிமனிதப் பயிற்சி என்பதை மாற்றி, கூட்டு முயற்சியாக்கும்போது மாணவர்களிடம் பேராற்றல் வெளிப்படும்,’’ என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.
விரும்பும் துறைக்கு தயார் படுத்தணும்
கல்வி மேம்பாட்டிற்கு பள்ளிக் குழந்தைகளின் உடல்நலமும் மனநலமும் மிகவும் முக்கியம். அதைக் கண்காணிக்க அருகிலுள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களைப் பரிசோதிக்க வழிவகுக்க வேண்டும். அனைத்துப் பள்ளி மாணவர்கள் குறித்தும் அரசிடம் தரவுகள் துல்லியமாக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில், ஏழாம் வகுப்பு வரும்போது மாணவர்களின் விருப்பம் எதை நோக்கி அமைந்திருக்கிறது என்பதை அறிவியல்பூர்வமாக, துல்லியமாகக் கணிக்கவேண்டும். பிறகு, அவர்கள் விரும்பும் துறைக்கு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். பொறியியல், மருத்துவம், பொருளாதாரம், கலை என மாணவர்களின் பல்வேறுபட்ட விருப்பங்களின் புள்ளிவிவரக் கணக்கு இருக்க வேண்டும். இதற்கு தற்போதைய மென்பொருள்துறை வளர்ச்சியை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கல்வியாளர்களிடம் எழுந்துள்ளது.