பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பிஎட், எம்எட் செமஸ்டர் தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு நவ.10 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொறுப்பு) கணேசன், அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பிஎட், பிஎட் ( சிறப்பு கல்வி), எம்எட் மற்றும் எம்எட் (சிறப்பு கல்வி) செமஸ்டர் தேர்வுகளை எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு ஆகியவற்றுக்கு நவம்பர் 10ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தகவல் தெரிவித்து ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான கட்டணங்களையும் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விடைத்தாள் நகல், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த பிஎட், எம்எட் மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் நவம்பர் 13ம் தேதிக்குள் பல்கலைக்கழகத்துக்கு ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.