இரு கைகளையும் இழந்த மாணவன் 471 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி: உறுப்பு மாற்று சிகிச்சைக்கு முதல்வர் ஏற்பாடு
இந்நிலையில், பிளஸ் 2 தேர்வில் சொல்வதை எழுதுபவர்கள் துணையுடன் தேர்வை சந்தித்து 600க்கு 471 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இதுகுறித்து மாணவர் கீர்த்திவர்மா கூறுகையில், ‘நான் சிறு வயதில் இருந்தே நன்றாக படிப்பேன். பிளஸ் 2 தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். எனக்கு பி.இ., ரோபோடிக்ஸ் படிக்க ஆசை. அதற்கு எனக்கு கைகள் மீண்டும் கிடைக்கும் வகையில் உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய தமிழக முதல்வர் உதவ வேண்டும்’ என்றார். இதனையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “கண்ணீர் வேண்டாம் தம்பி. அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் உங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளை கவனிக்கச் சொல்லி இருக்கிறேன்’’ என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, நேற்று மாலை கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், மருத்துவக்குழு மற்றும் ஆசிரியர்களுடன் ஜீனூரில் மாணவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், ‘முதல்வரின் உத்தரவின்பேரில் மாணவனுக்கு உயர்கல்விக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். மருத்துவத்துறை உதவியுடன் உறுப்பு மாற்று சிகிச்சை ஏற்பாடு செய்யப்படும். வீட்டுமனை பட்டா, வீடு கட்டுவதற்கான கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ஆணை வழங்கப்படும்’ என்றார். மேலும், மாணவரின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டர் தனது சொந்த நிதியில் இருந்து கீர்த்திவர்மாவிற்கு உடனடியாக புதிய மடிக்கணினியை வழங்கினார். இதேபோல், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் எம்எல்ஏ, மாணவர் கீர்த்திவர்மாவிற்கு ரூ.25 ஆயிரம் நிதியும், திருக்குறள் புத்தகமும் வழங்கினார்.