பி.எட் மற்றும் எம்.எட் படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை 30ம்தேதி வரை நீட்டிப்பு
சென்னை: பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு வருகிற 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித் துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2025-26ம் ஆண்டிற்கான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.
இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வருகிற 30ம் தேதி வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதளத்தில் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அதேபோல், எம்.எட். மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவும் 30ம் தேதி வரை செயல்படும். www.tngasa.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பித்துக் கொள்ளலாம்.