கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பிய நிலையில் 17வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை?.. கொலை செய்யப்பட்டதாக தாய் குற்றச்சாட்டு
ஆஸ்டின்: அமெரிக்காவில் கல்லூரி மாணவி அடுக்குமாடி குடியிருப்பின் மேலிருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், அது தற்கொலை அல்ல என்றும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது தாயார் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் லாரிடோ பகுதியைச் சேர்ந்த பிரியானா அகுலேரா என்பவர், டெக்சாஸ் ஏ அண்ட் எம் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை ஆஸ்டின் நகரில் நடைபெற்ற கால்பந்து போட்டியைக் காணச் சென்றுள்ளார். போட்டியைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சிக்குப் பிறகு, சனிக்கிழமை அதிகாலை ஆஸ்டின் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வெளியே அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் 17வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும், இது கொலை வழக்கு அல்ல என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே இறப்பிற்கான முழுமையான காரணம் தெரியவரும் எனவும் போலீசார் கூறியுள்ளனர். ஆனால், தனது மகளின் மரணத்தை தற்கொலையாக ஏற்க முடியாது என்றும், இதில் மர்மம் இருப்பதாகவும் தாயார் ஸ்டீபனி ரோட்ரிக்ஸ் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘என் மகள் எதிர்காலத்தில் வழக்கறிஞராக ஆக வேண்டும் என்ற கனவுடன் மகிழ்ச்சியாக இருந்தார்; அவர் ஒருபோதும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்க மாட்டார். சம்பவத்தன்று அந்த அறையில் சுமார் 15 பேர் இருந்துள்ளனர்.
இறப்பதற்கு முன்பு என் மகள் அங்கிருந்த மற்றொரு பெண்ணுடன் சண்டையிட்டது தெரியவந்துள்ளது. அவளது செல்போனில் உள்ள குறுஞ்செய்திகளை ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரியும். ஆனால் போலீசார் அதைக் கவனிக்கவில்லை’ என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். சந்தேகத்திற்குரிய மரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.