மாணவி படிப்புக்கு ரூ1.70 லட்சம் உதவி: கே.பி.சங்கர் எம்எல்ஏ வழங்கினார்
திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எண்ணூர், தாழங்குப்பம் மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பாஸ்கர். இவர் சலவைத் தொழிலாளி. இவரது மகள் இந்துபாஷினி. இவர் எண்ணூரில் உள்ள வ.உ.சி பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 549 மதிப்பெண் பெற்றிருந்தார். அவருக்கு கவரப்பேட்டையில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஏஐஎம்எல் பிரிவில் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கே.பி.சங்கர் எம்எல்ஏ, இந்துபாஷினியை பாராட்டி, அவரின் பட்டப் படிப்பிற்கு தனது சொந்த நிதியில் இருந்து ரூ. 1.70 லட்சம் வழங்கினார்.
இதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவ, மாணவிகளின் கல்வி, விளையாட்டு மற்றும் முன்னேற்றத்திற்காக செய்துவரும் திட்டங்களை எடுத்துரைத்து, கல்வி மட்டுமே யாராலும் அழிக்க முடியாத செல்வம் என்பதை உணர்ந்து நன்றாக படிக்க வேண்டும் என்றும் இதற்கு உறுதுணையாக இருப்போம் என்றார்.