மாணவி பலாத்காரம் வழக்கறிஞர் கைது
நாமக்கல்: நாமக்கல் கொசவம்பட்டி வஉசி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் சுரேந்தர் (28). வக்கீலாக பணியாற்றி வருகிறார். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், நாமக்கல் சட்டக்கல்லூரியில் கடந்த ஆண்டு படித்து வந்தார். அப்போது, இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. தொடர்ந்து அந்த மாணவி, சுரேந்தரிடம் ஜூனியராக சேர்ந்தார்.
இதையடுத்து, மாணவியுடன் சுரேந்தர் ஏற்காட்டிற்கு சென்று அறை எடுத்து தங்கினார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, தனது அலுவலகத்தில் வைத்தும் மாணவியை பலாத்காரம் செய்துள்ளார். இதில், அந்த மாணவி கர்ப்பமடைந்தார். இதையடுத்து, சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாணவிக்கு கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது.
இதனிடையே, கடந்த மே மாதம் சட்டப்படிப்பை முடித்த மாணவி, சுரேந்தரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு சுரேந்தர் மறுத்துள்ளார். இதுகுறித்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவி புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து நேற்று சுரேந்தரை கைது செய்தனர். மேலும், அவரது பெற்றோர் மணிவண்ணன்-வசந்தா, நண்பர் கபில் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.